பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த கார்த்தி
நடிகர் கார்த்தி இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது.

Actor Karthi Birthday Special Updates
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமான கார்த்தி, தற்போது 25 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் கார்த்தி இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இதுதவிர அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன.
வா வாத்தியார் பட போஸ்டர் வெளியீடு
அதன்படி நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படமான 'வா வாத்தியார்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தியின் பிறந்தநாளையொட்டி இந்த ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். 'சூது கவ்வும்' படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம். குமார், ஆனந்த்ராஜ், சில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ரிலீசுக்கு தயாராகும் வா வாத்தியார்
சத்யராஜ் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கும் படம் இதுவாகும். 'காதலும் கடந்து போகும்' தான் அவர் இயக்கிய கடைசி படம். தொண்ணூறுகளில் வெளியான மசாலா படங்களுக்கு ஒரு ட்ரிபியூட் செய்யும் படமாக இது உருவாகி வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 'வா வாத்தியார்' படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படத்தில் கார்த்தி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.
சர்தார் 2 படத்தின் மாஸ் போஸ்டர்
அதேபோல் நடிகர் கார்த்தி கைவசம் உள்ள மற்றொரு படமான சர்தார் 2 படத்தின் சிறப்பு போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் கார்த்தி செம ஸ்டைலிஷான மாஸ் லுக்கில் காட்சியளிக்கிறார். சர்தார் 2 திரைப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கார்த்தி உடன் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.