டூரிஸ்ட் ஃபேமிலி முதல் ரெட்ரோ வரை; ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் இதோ
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதில் என்னென்ன படங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

Top 5 most watched Movies on OTT
திரைப்படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பவர்களை விட ஓடிடியில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாகிவிட்டது. ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்களிலேயே ஓடிடிக்கு வந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் தியேட்டர்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டுள்ளனர். பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே தியேட்டருக்கு சென்று பார்க்கின்றனர். மற்றபடி சிறு பட்ஜெட் படங்களையெல்லாம் ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என்கிற மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் ஓடிடி தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிட படங்கள் என்னென்ன?
இந்த நிலையில், ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த ஜூன் 2ந் தேதியில் இருந்து 8ந் தேதி வரை ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் Bhool Chuk Maaf என்கிற இந்தி திரைப்படம் தான் 5ம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த திரைப்படம் கடந்த வாரத்தில் மட்டும் 40 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது. கரண் ஷர்மா இயக்கிய இப்படத்தில் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடித்திருக்கிறார்.
டூரிஸ்ட் ஃபேமிலியை முந்திய ரெட்ரோ
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த படம் 44 லட்சம் பார்வைகளை பெற்று 4ம் இடத்தில் உள்ளது. அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படம் கடந்த வாரம் மட்டும் 48 லட்சம் வியூஸ் அள்ளி 3ம் இடத்தை பிடித்துள்ளது.
முதலிடத்தில் ஹிட் 3
ஓடிடியில் அதிகம் பேர் விரும்பி பார்த்த படங்களின் பட்டியலில் நடிகர் மோகன்லால் நடித்த துடரும் திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இப்படம் 56 லட்சம் பார்வைகளுடம் 2ம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் நானி நடித்த ஹிட் 3 திரைப்படம் தான் முதலிடம் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இந்த திரைப்படத்திற்கு 57 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இதில் நடிகர் கார்த்தியும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.