முக்கிய இடங்களில் வாரிசு படத்தின் வெளியீடு உரிமையை கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தை மிகவும் முக்கியமான மூன்று இடங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், தளபதி விஜய் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. மிகப் பிரமாண்டமாக உருவாக்கிய இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சங்கீதா, ஷியாம், சரத்குமார், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், படத்தின் வியாபாரம் மற்றும் புரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
அந்த வகையில் 'வாரிசு' படத்தை முக்கிய மூன்று இடங்களில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, தன்னுடைய ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'வாரிசு' படத்தை, தமிழகத்தில் வெளியிடும் உரிமையை... 7 ஸ்கிரீன் நிறுவனம் கைப்பற்றியதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்ட போதிலும், சில இடங்களில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, செங்கல்பட்டு, மற்றும் கோயபுத்தூர் போன்ற இடங்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.