சோசியல் மீடியாவில் டிரெண்டான பொன்னியின் செல்வன் சேலைகள்... விற்பனைக்கு திடீர் தடை விதிப்பு - காரணம் இதுதான்
Ponniyin selvan : பட்டுப்புடவையில் பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெறும்படி வடிவமைத்து, சமீபத்தில் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதே பெயரில் பிரம்மாண்ட திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதன் புரமோஷன் பணிகளும் ஒரு பக்கம் வேகமெடுத்து வருகின்றன. வழக்கமாக பிரபலமான படங்கள் ஏதேனும் ரிலீசானால் அதில் உள்ள நடிகர், நடிகைகள் அணிந்துள்ள ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்யப்படுவது என்பது சமீபத்திய டிரெண்டாக உள்ளது.
அண்மையில் விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீசானபோது கூட அவர் படத்தில் அணிந்திருக்கும் ரத்தக்கறையுடன் கூடிய சட்டையைப் போன்றே சட்டையை டிசைன் செய்து அதனை விற்பனை செய்தனர். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்திற்கு சற்று வித்தியாசமாக பட்டுப்புடவையில் அப்படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெறும்படி வடிவமைத்து, சமீபத்தில் சமூக வலைதளங்களில் அந்த புடவைகளின் புகைப்படங்கள் வைரலாகின.
இதையும் படியுங்கள்... 'ஜெயிலர்' படப்பிடிப்பின் போது 'ஜவான்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த ரஜினி! ஷாருக்கானுடன் நடந்த சந்திப்பு
அந்த புடவைகள் விற்பனைக்கு தயாராகி வந்த நிலையில், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாம். இந்த சேலைக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆன்லைன் சேலை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், “10 நாட்கள் கடுமையாக உழைத்து இந்த சேலையை தயாரித்து தற்போது விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து எங்களை தொடர்பு கொண்டனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்கள் சேலையில் இடம்பெற்றுள்ளது. இதனை எங்களிடம் காப்பீடு பெற்று நீங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அறியாமையால் சேலையை இப்படி உருவாக்கி இருக்கிறீர்கள். அதனால் உடனடியாக இந்த சேலை தயாரிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதால் 5 சேலைகளுடன் அதன் உற்பத்தியை நிறுத்திவிட்டோம் என கூறியுள்ளார்.
மேலும் வாய்ப்பு கிடைத்தால் தற்போது அச்சிடப்பட்டு தயாராக இருக்கும் இந்த 5 சேலைகளையும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகிய நடிகைகளுக்கு பரிசாக வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சிம்புவுக்கு காதல் திருமணம்... ரஜினி தான் அவரின் மாமனார் - கொளுத்திபோட்ட பிரபல நடிகை