- Home
- Cinema
- Rajinikanth : ரஜினிகாந்த் தன் முழு சொத்துக்களையும் தமிழ் மக்களுக்காக எழுதி வைப்பேன் என சொன்னாரா? உண்மை பின்னணி இதோ
Rajinikanth : ரஜினிகாந்த் தன் முழு சொத்துக்களையும் தமிழ் மக்களுக்காக எழுதி வைப்பேன் என சொன்னாரா? உண்மை பின்னணி இதோ
Rajinikanth's Generous Decision : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தமிழ் மக்களுக்காக கொடுப்பேன் என சொன்னதாக தகவல் பரவி வருகிறது. அதன் உண்மை தன்மையை பார்க்கலாம்.

ரஜினிகாந்த் பற்றி காட்டுத்தீ போல் பரவும் தகவல்
நடிகர் ரஜினிகாந்த் என்றாலே அவரது திரைப்படங்களுக்கும், ஸ்டைலுக்கும் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு அவரது மனிதநேய செயல்களுக்கும் தனி வரவேற்பு உண்டு. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தான் இறந்த பின்னர் தன்னுடைய அனைத்து சொத்துக்களும் தமிழ் மக்களுக்கு சென்றடையும் என்றும், அதில் ஒரு பைசா கூட தன்னுடைய குடும்பத்துக்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு செய்திக் குறிப்பு ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வந்தது. ஆனால் உண்மையில் ரஜினிகாந்த் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு கொடுப்பேன் என எந்த ஒரு மேடையிலும் சொல்லவில்லை.
உண்மையில் ரஜினி சொன்னதென்ன?
தனக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தை, அதன்பெயரில் இயங்கி வரும் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டுக்கு எழுதி வைப்பதாகவும், அதன் வாயிலாக அந்த மண்டபத்தின் மூலம் வரும் ஒவ்வொரு பைசாவும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சென்றடையும் என்றும் ரஜினிகாந்த், தன்னுடைய ரசிகர்கள் முன்னிலையில் கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற படையப்பா படத்தின் சில்வர் ஜூப்ளி விழாவில் அறிவித்தார். அதைதான் தற்போது பட்டி டிங்கரிங் பார்த்து அவர் முழு சொத்தையும் மக்களுக்கு எழுதி வைப்பேன் என சொன்னதாக பரப்பி வருகிறார்கள்.
ஒரு பைசா கூட என் குடும்பத்துக்கு வேண்டாம்
அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், தனக்குச் சொந்தமான சுமார் ஒன்றேகால் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராகவேந்திரா மண்டபத்தை, ராகவேந்திரா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டுக்கு எழுதி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது மறைவுக்குப் பிறகு அந்த மண்டபத்தின் முழுச் சொத்தும் அறக்கட்டளைக்குச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்தச் சொத்தின் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவும் தன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு ரூபாய் கூட தனது குடும்பத்தினருக்குச் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது இந்த முடிவுக்குப் பின்னால் ரசிகர்களின் அன்பும் ஆதரவுமே இருப்பதாக ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்களது உழைப்பில் சம்பாதித்த பணத்தில் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என டிக்கெட் வாங்கி தனது படங்களைப் பார்த்ததால்தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், மக்களின் அன்புக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவெளியில் அறிவித்த ரஜினிகாந்த்
மேலும், தனது உயிலை மூத்த வழக்கறிஞர் வரதாச்சாரியாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது அதைத் தாமதிக்காமல் உடனே செய்துவிட வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் விளக்கியுள்ளார். உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், தனது முடிவை பொதுவெளியில் அறிவிப்பதன் மூலம் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதியாக இதை மாற்ற விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பாக தனது மனைவி லதா மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோரிடம் இதுகுறித்துப் பேசியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவரது முடிவுக்கு குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த விஷயத்தில் ஆதரவாக இருந்த மனைவி லதாவுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.









