'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு..! தமன்னாவுடன் சேர்ந்து உற்சாகமாக கேக் கட் பண்ணிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகி வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ஜெயிலர் வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர் ஜாக்கி செரீப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசி நாளில் தலைவர் ரஜினிகாந்த்... நடிகை தமன்னா மற்றும் படக்குழுவினரோடு சேர்ந்து கேக் கட் பண்ணி படப்பிடிப்பை நிறைவு செய்ததை புகைப்படங்கள் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கிய, 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் இந்த படத்தில் நடித்துள்ள, அனைத்து நடிகர் - நடிகைகளும் இடம் பெற்ற டீசர் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டது. படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், அடுத்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகளில் பட குழுவினர் தீவிர கவனம் செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.