ஆர்.ஆர்.ஆர் குழுவின் ஆஸ்கர் செலவை வெளியிட்ட ராஜமவுலி மகன்... அப்போ 80 கோடினு சொன்னதெல்லாம் உருட்டா..!
ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஆஸ்கர் விருது விழாவிற்கு ரூ.80 கோடி செலவழித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அதன் உண்மை விவரத்தை இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா வெளியிட்டுள்ளார்.
SS Karthikeya
ராஜமவுலி இயக்கிய பிரம்மாண்ட படைப்பான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையையும், நட்பையும் மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தார் ராஜமவுலி. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
அர்.ஆர்.ஆர் படத்தை போல் அப்படத்தின் பாடல்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அதில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து என்கிற பாடல் சர்வதேச அளவில் கவனம் பெற்றதோடு, உலகின் மிக உயரிய விருதுகளாக கருதப்படும் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்று அசத்தியது. இதன்மூலம் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வெல்லும் முதல் இந்திய திரைப்படம் என்கிற சாதனையையும் ஆர்.ஆர்.ஆர். படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... காது கொடுத்து கேட்க முடியல... விடுதலை படத்தில் இவ்ளோ கெட்ட வார்த்தைகளா..! வெளியானது சென்சார் சான்றிதழ்
ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் ஆஸ்கர் வென்றதற்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும், மறுபுறம் விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வந்தன. குறிப்பாக இந்த ஆஸ்கர் விருது விழாவிற்காக ராஜமவுலி ரூ.80 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும், அவர்கள் காசு கொடுத்து தான் ஆஸ்கர் விருதை வாங்கி உள்ளார்கள் என்றும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இதற்கு இயக்குனர் ராஜமவுலியின் மகனும், ஆஸ்கர் விருது விழாவுக்கான ஆர்.ஆர்,ஆர் படத்தின் புரமோஷன் பணிகளை மேற்கொண்டவருமான கார்த்திகேயா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது : “சமூக வலைதளங்களில் பரவி வரும் அளவுக்கு ஆஸ்கருக்காக நாங்கள் செலவு செய்யவில்லை. கீரவாணி, சந்திரபோஸ், காலபைரவா, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், ராகுல், பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைத்தது. ஆஸ்கர் விதிப்படி விருது வெல்பவர்கள் மட்டுமே அவருடன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து வரலாம். அவர்களுக்கு மட்டுமே இலவச அனுமதி என்பதனால் எஞ்சியுள்ள படக்குழுவினருக்கு டிக்கெட் எடுத்து தான் பங்கு பெற்றோம். அந்த டிக்கெட் விலை ரூ.57 ஆயிரம் முதல் ரூ.1.2 லட்சம் ஆகும்.
அதுமட்டுமின்றி ஆஸ்கர் விழாவுக்காக ரூ.80 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் நாங்கள் செலவு செய்தது வெறும் ரூ.8.5 கோடி தான். நாங்கள் 5 கோடி தான் செலவு செய்ய திட்டமிட்டு இருந்தோம் ஆனால் அந்த செலவு ரூ.8.5 கோடியாக அதிகரித்துவிட்டது என ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விடுதலை, பத்து தல மட்டுமில்ல இந்தவாரம் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸா? ரசிகர்களுக்கு செம்ம டிரீட் வெயிட்டிங்