- Home
- Cinema
- அக்கட தேசத்தில் இருந்து வந்த எதிர்ப்பு; பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட தலைப்பு மாற்றப்படுமா?
அக்கட தேசத்தில் இருந்து வந்த எதிர்ப்பு; பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட தலைப்பு மாற்றப்படுமா?
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டியூட் படத்தின் தலைப்புக்கு கன்னட படக்குழு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Dude Movie Title Controversy
’லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அவரது அடுத்த படத்திற்கு ’டியூட்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இந்தத் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இது தங்கள் படத்தின் தலைப்பு என்று கூறியுள்ளனர்.
டியூட் பட தலைப்பு சர்ச்சையில் சிக்கியது ஏன்?
கன்னட திரையுலகில் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் ரவிச்சந்திரன் நடிக்கும் படத்திற்கு 2016 ஆம் ஆண்டே ’டியூட்’ என்று பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை எஸ். கார்த்தி இயக்குகிறார். கன்னட ’டியூட்’ படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கும் ’டியூட்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதும், கன்னட திரைப்படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இயக்குநர் எஸ். கார்த்தி, "நாங்கள் 2016-லேயே ’டியூட்’ தலைப்பைப் பதிவு செய்து, படப்பிடிப்பைத் தொடங்கினோம். இப்போது தமிழில் இதே பெயரில் படம் வருவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தும், எங்கள் படத்தைப் பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்போம். தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தலைப்புக்கான உரிமை தங்களிடம் இருப்பதால், வேறு யாரும் இதைப் பயன்படுத்துவது விதிமீறல் என்று அவர் வாதிடுகிறார்.
டியூட் பட அப்டேட்
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். கீர்த்தீஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். ’லவ் டுடே’ போலவே இதுவும் ஒரு காதல் நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தலைப்புச் சர்ச்சை படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை.
டியூட் தலைப்பு மாற்றப்படுமா?
இந்தத் தலைப்புச் சர்ச்சை எப்படித் தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிரதீப் ரங்கநாதன் தரப்பு கன்னட திரைப்படக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணுமா, அல்லது தலைப்பை மாற்றுமா, அல்லது சட்டப் போராட்டத்திற்குச் செல்லுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. ’லவ் டுடே’ படத்திற்குப் பிறகு பிரதீப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், இந்தச் சர்ச்சை விரைவில் முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.