காதலர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்! காத்துவாக்குல கசிந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் சூப்பர் அப்டேட்
பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று பொன்னியின் செல்வன் 2 படக்குழு வெளியிட உள்ள சர்ப்ரைஸான அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன், பல வருட முயற்சிக்கு பின்னர் கடந்த ஆண்டு தான் திரைவடிவம் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் மணிரத்னமும், லைகா நிறுவனமும் தான். அவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீசாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழு முதல் பாகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ரிலீஸ் செய்தது. படமும் எதிர்பார்த்தபடியே சக்கை போடு போட்டதோடு வசூலையும் வாரிக்குவித்தது. இப்படம் மொத்தமாக ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்.... கிடப்பில் போட்ட படங்களை தூசிதட்டும் கவுதம் மேனன்! துருவநட்சத்திரத்தை தொடர்ந்து உயிர்பெறும் விஜய் நடிகரின் படம்
இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறிய வண்ணம் உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்படி இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக லைகா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தற்போதே அதன் அப்டேட்டையும் வெளியிட தயாராகிவிட்டார்களாம்.
அதன்படி வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அநேகமாக இது அருண்மொழிவர்மனுக்கும், வானதிக்கும் இடையேயான காதல் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்.... துணிவு முதல் டாடா வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் களமிறங்கும் திரைப்படங்களின் அப்டேட்