இளைஞருடன் அடிதடி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தாடி பாலாஜி மனைவி நித்யா - போலீஸார் விசாரணை
சின்னத்திரை பிரபலமான தாடி பாலாஜியின் மனைவி நித்யா, இளைஞருடன் அடிதடியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் தாடி பாலாஜி. சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டை போட்டதால் தாடி பாலாஜியை பிரிந்த நித்யா, தற்போது தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
மாதவரத்தில் உள்ள சாஸ்திரி நகரில் வசித்து வந்த நித்யாவிடம், மாதவரம் பொன்னியம்மன் மேடு நகரைச் சேர்ந்த கலைச்செல்வன் என்கிற 29 வயது இளைஞர் ஒருவர் கடன் வாங்கி உள்ளார். மொத்தம் ரூ.94 ஆயிரம் கடனாக வாங்கிய கலைச்செல்வன் 52 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். எஞ்சியுள்ள தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் நிதியாவுக்கும் கலைச்செல்வனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... பாரதிராஜா இயக்க... இளையராஜா இசையமைத்த ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடரின் டிரைலர் இதோ
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடன் தொகையை வாங்க கலைச்செல்வனின் வீட்டுக்கு சென்றுள்ளார் நித்யா. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறி இருவரும் அடிதடியில் இறங்கி உள்ளனர். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நேரில் வந்த போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். இதையடுத்து இருவரும் தனித்தனியே போலீஸில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... 'பொன்னியின் செல்வன்' பார்ட் 1 சாதனையை நெருங்க முடியாமல் திணறும் பார்ட் 2! இதுவரை உலகளவில் முழு வசூல் விவரம்?