மார்பக வரி கேட்டதால் மார்பை அறுத்தெறிந்த சிங்கப்பெண் நங்கேலி! உண்மை கதையை உரக்கச்சொல்லி பேசுபொருளான மலையாளபடம்
மலையாளத்தில் வெளியாகி இருக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு திரைப்படத்தில் மார்பக வரிக்கு எதிராக குரல் கொடுத்த நங்கேலி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
150 வருடத்திற்கு முன்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் சாதிக் கொடுமை தலைவிரித்து ஆடியது. ஆதிக்க வர்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் நூதனமுறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட கொடூர சம்பவங்களும் அரங்கேறி வந்தன. இந்த காலகட்டத்தில் கேரள மாநிலத்தில் பல கொடுமையான சட்டங்களும், தண்டனைகளும் அமலில் இருந்தது. இதில் குறிப்பாக திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு கொடூர சட்டத்தை கொண்டுவந்தது. அது தான் மார்பக வரி சட்டம்.
உயர்குடி பெண்களைத் தவிர மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் தங்கள் மார்பகத்தின் அளவிற்கு ஏற்பவும், அதனை மறைக்கவும் வரி செலுத்த வேண்டும். மார்பை மறைக்க வேண்டாம் என்றால் வரி செலுத்த வேண்டாம் என்பதே அந்த கொடூர சட்டத்தின் பின்னணி. இந்த மார்பக வரி சட்டத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண், தனி ஆளாக குரல் கொடுத்தால், அவள் பெயர் தான் நங்கேலி.
நங்கேலியின் எதிர்ப்பால் கடுப்பான அரசு, அவளின் குரலை ஒடுக்க, அவள் மட்டும் இரட்டை வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத நங்கேலி, தான் வரி செலுத்த முடியாது என்கிற முடிவில் தீர்மானமாக இருந்தாள். ஒருநாள் வீடுவரை வந்த அதிகாரிகள் நங்கேலியிடம் வரி கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களை கோபத்துடன் எதிர்த்து பேசிய நங்கேலியை அதிகாரிகள் ஆட்களை ஏவி அடித்து துன்புறுத்தி மானபங்கப்படுத்தி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணி கர்ப்பம்?... கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி...!
அவமானம் தாங்க முடியாத நங்கேலி, தன்னிடம் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து, மார்பகம் இருந்தா தான வரி கேட்பாய், நீயே எடுத்துச் செல் எனக் கூறி அதிகாரிகள் முன் தான் அணிந்திருந்த மேலாடையை அவிழ்த்து, தனது மார்பகங்களை அறுத்து தன் முன்னே இருந்த வாழை இலையில் வைத்தால், இதைக்கண்டு அனைவரும் உறைந்து போயினர். வலியால் துடிதுடித்த நங்கேலி, ரத்த வெள்ளத்தில், அங்கேயே சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.
மார்பக வரிக்கு எதிராக சிங்கப்பெண் போல் தனி ஆளாக குரல் கொடுத்து தன் உயிரை தியாகம் செய்த நங்கேலியின் இந்த வீர மரணத்தை பார்த்து ஆடிப்போன அரசாங்கம் உடனடியாக இந்த சட்டத்தை நீக்க உத்தரவிட்டது.
வரலாற்றில் நடந்துள்ள இத்தகைய கொடூரமான சம்பவத்தை தற்போது தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ள படம் தான் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’. மலையாள திரையுலகில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நங்கேலி கதாபாத்திரத்தில் நடிகை கயாடு லோகர் நடித்திருக்கிறார்.
இதில் வேலாயுத பணிக்கர் என்கிற போராளி கதாபாத்திரத்தில் நடிகர் சிஜு வில்சன் நடித்து இருக்கிறார். வினயன் இப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் ரிலீசான பின்னர் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இப்படத்தில் நங்கேலியாக நடித்துள்ள கயாடு லோகர் மார்பகத்தை அறுத்து எறியும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருள் ஆகி உள்ளது. தற்போது கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவிலா இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது என்பது நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ படம் மூலம் கம்பேக் கொடுத்த பாடகர் உதித் நாராயணன் - வைரலாகும் ‘நல்லா இருமா’ பாடல்