Padai Thalaivan : ஒரு வார முடிவில் படை தலைவன் செய்துள்ள வசூல் விவரம்.!
சமீபத்தில் வெளியான ‘படை தலைவன்’ திரைப்படம் ஒரு வாரம் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

Padai Thalaivan Box Office Collection
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் திரைத்துறையின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடித்து வருகிறார். ‘சகாப்தம்’, ‘மதுரவீரன்’ ஆகிய படங்களில் நடித்த இவருக்கு அந்த படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது ‘படை தலைவன்’ என்கிற ஆக்ஷன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை ‘வால்டர்’, ‘ரேக்ளா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் யு.அன்பு இயக்கியுள்ளார். வி.ஜே கம்பெனி சார்பில் ஜெகநாதன் பரமசிவம் தயாரித்திருக்கிறார். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஜூன் 13 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
‘படை தலைவன்’ படத்தின் கதை
யானைக்கும், மனிதருக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு தமிழ் திரையுலகில் பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன.்அந்த வரிசையில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘படை தலைவன்’. படத்தின் கதை குறித்து பார்த்தோம் என்றால் பொள்ளாச்சி அருகில் சேர்த்துமடை என்கிற ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (கஸ்தூரி ராஜா). இவர் தனது மகன் வேலு (சண்முக பாண்டியன்) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மேலும் மணியன் என்கிற யானையையும் வளர்த்து வருகின்றனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போல யானை இருக்கிறது. ஒரு கட்டத்தில் யானையை ஒரு கும்பல் கடத்தி செல்கிறது. யானை ஒரிசாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
‘படை தலைவன்’ படத்தில் நடித்த கலைஞர்கள்
யானையை மீட்பதற்காக சண்முக பாண்டியனும், அவரது நண்பர்களும் செல்கின்றனர். யானை விலங்குகளை பலி கொடுக்கும் வில்லன் கருடன் ராமிடம் சிக்கிக் கொள்கிறது. யானை மீட்கப்பட்டத வேலுவின் பயணம் வெற்றியாக அமைந்ததா? இறுதியில் என்ன நடந்தது? என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சண்முக பாண்டியன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய தந்தையாக கஸ்தூரி ராஜாவும், கதாநாயகியாக யாமினி சந்தரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். மேலும் கருடன் ராம், எம்.எஸ் பாஸ்கர், முனீஷ்காந்த், யூகி சேது உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளனர். இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. எஸ்.ஆர் சதீஷ்குமார் பொள்ளாச்சி மலைகளின் அழகையும் ஒரிசாவின் காட்டுப்பகுதிகளையும் அழகாக படமாக்கி உள்ளார். சண்டை காட்சிகளை மகேஷ் கவனித்துள்ளார்.
AI தொழில்நுட்பம் மூலம் திரையில் தோன்றிய விஜயகாந்த்
‘படை தலைவன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையேப் பெற்றது. யானைக்கும், மனிதர்களுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை பலரும் பாராட்டினர். சண்முக பாண்டியன் முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக ரசிகர்கள் கூறினர். ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அவரது உடல்வாகு பொருத்தமாக இருப்பதாக கூறினர். மேலும் யானை எப்படி ஒரிசாவுக்கு சென்றது போன்ற சில காட்சிகள் தெளிவில்லாமல் இருந்தது. விஜயகாந்தின் ரசிகர்கள் மத்தியில் சண்முக பாண்டியனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அவரை பார்க்கும் பொழுது விஜயகாந்தை பார்ப்பது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் AI தொழில்நுட்ப மூலம் விஜயகாந்த் மீண்டும் திரையில் தோன்றியது ரசிகர்ளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிலர் இந்த AI-ல் செயற்கை தனம் அதிகமாக இருந்ததாகவும், ரசிக்கும்படியாக இல்லை என்றும் கூறினர்.
முதல் வாரத்தில் பெற்ற ‘படை தலைவன்’ வசூல்
குறைந்த பட்ஜெட்டில், குறைந்த தியேட்டர்களில் வெளியான இந்த திரைப்படம் சுமாரான வசூலையே பெற்று வருகிறது. முதல் நாளில் ரூ.1.29 கோடியும், 2வது நாளில் ரூ.1.22 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.1.75 கோடியும் வசூலித்து இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் சரிவைக் கண்டது. நான்காவது நாள் ரூ.87 லட்சமும், ஐந்தாவது நாள் ரூ.83 லட்சமும், ஆறாவது நாள் ரூ.66 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. ஏழாவது நாளான ஜூன் 19ம் தேதி ரூ.40 லட்சம் மட்டுமே வசூல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏழு நாட்கள் முடிவில் சுமார் ரூ.7.02 கோடி மட்டுமே இந்த திரைப்படம் வசூலித்துள்ளது. படம் குறைந்த பட்ஜெட்டில் உருவான நிலையில் இந்த வசூல் ஓரளவிற்கு படக் குழுவினருக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.
ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சண்முக பாண்டியன்
வரும் நாட்களில் ‘குபேரா’, ‘டிஎன்ஏ’ போன்ற புதிய படங்கள் வருவதால் படை தலைவனின் வசூல் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த திரைப்படம் சண்முக பாண்டியனுக்கு முக்கிய படமாக அமைந்துள்ளது. தந்தையைப் போலவே ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த சண்முக பாண்டியன் முயற்சித்திருக்கிறார். கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்த போதிலும் குறிப்பிட்ட அளவு வசூலை ஈட்டியுள்ளது. இது சண்முக பாண்டியனுக்கு ஒரு உந்துதலையும், விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஆறுதலையும் கொடுத்துள்ளது.