- Home
- Cinema
- நா.முத்துக்குமார் சென்சார் போர்டுக்கே விபூதி அடித்த கதை தெரியுமா? கவிஞரின் தக் லைஃப் சம்பவம்..!
நா.முத்துக்குமார் சென்சார் போர்டுக்கே விபூதி அடித்த கதை தெரியுமா? கவிஞரின் தக் லைஃப் சம்பவம்..!
கவிஞர் நா முத்துக்குமார் மிகவும் விருப்பப்பட்டு எழுதிய பாடல் வரிகளை சென்சார் போர்டு அதிகாரிகள் கத்திரிபோட்டு நீக்கி இருக்கிறார்கள். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Na Muthukumar Song Secret
பாடல் வரிகளால் மனிதர்களின் மனதைத் தொட்டு, சாதாரண வார்த்தைகளையே கவிதையாக்கும் திறமை கொண்டவர் தான் நா.முத்துக்குமார். 2016-ஆம் ஆண்டு அவர் மறைந்தாலும், அவர் எழுதிய பாடல் வரிகள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் நங்கூரமாய் பதிந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கிய வெற்றிடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியாத நிலையே உள்ளது. அந்த அளவுக்கு தனித்துவமான மொழியும், ஆழமான உணர்வும் கொண்ட பாடலாசிரியராக நா.முத்துக்குமார் திகழ்ந்தார்.
நா முத்துக்குமார் பாடல் சீக்ரெட்
இன்று தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது சென்சார் போர்டு விஷயம் தான். சென்சார் போர்டு பிரச்சனையால் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்த சென்சார் போர்டு படங்களுக்கு மட்டுமல்ல பாடல்களுக்கும் கத்திரி போட்ட சம்பவங்கள் இருக்கின்றன. அப்படி நா முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு சென்சார் போர்டு கத்திரி போட்டிருக்கிறது. அது எந்தப் பாடல் என்பதைப்பற்றி பார்க்கலாம்.
2001-ஆம் ஆண்டு மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘டும் டும் டும்’ திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அத்தான் வருவாக’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலுக்காக நா.முத்துக்குமார் ஆரம்பத்தில் எழுதிய வரிகளில், புத்தன்கூட காதலித்தால் புத்தி மாறுவானே... போதிமர உச்சியிலே ஊஞ்சல் ஆடுவானே என எழுதி இருந்தார்.
கத்திரி போட்ட சென்சார் போர்டு
ஆனால், அந்த வரிகளை கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகள், புத்தரைப் பற்றி இப்படி எழுதுவது தவறு எனக் கூறி, அந்தப் பகுதியை நீக்க உத்தரவிட்டார்களாம். இதையடுத்து, நா.முத்துக்குமார் புத்தன்என்பதற்குப் பதிலாக சித்தன் என்றும், போதிமரத்திற்கு பதிலாக ஆலமரம் என்றும் மாற்றி, வரிகளைத் திருத்திக் கொடுத்தார். பாடல் வெளியானாலும், தன் விருப்பமான வரிகள் நீக்கப்பட்டதற்கான வருத்தம் அவருக்குள் இருந்ததாம்.
அந்த ஆதங்கம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2003-ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சாமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு’ என்ற பாடலில், அவர் மீண்டும் அதே வரிகளை சற்று பட்டி டிங்கரிங் பார்த்து பயன்படுத்தினார். இந்தமுறை, “காதல் வந்து நுழைந்தால் போதிமரக் கிளையில், ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்” என்று எழுதி, தன் ஆசைப்பட்ட உவமையை புத்திசாலித்தனமாக படத்தில் இடம் பெறச் செய்தார்.
ட்விஸ்ட் வைத்த நா முத்துக்குமார்
ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த வரிகள் சென்சார் போர்டின் கவனத்திற்கு வராமல், அப்படியே பாடலில் இடம்பெற்றுவிட்டன. இதன் மூலம், ஒருகாலத்தில் நீக்கப்பட்ட தன் வரிகளை வேறொரு படத்தில் வெற்றிகரமாக பயன்படுத்திய சந்தோஷத்தில் நா.முத்துக்குமார் இருந்ததாக கூறப்படுகிறது. சென்சார் போர்டுக்கே விபூதி அடித்து தான் ஆசைப்பட்டு எழுதிய பாடல் வரிகளை படத்தில் இடம்பெறச் செய்த நா முத்துக்குமாரின் தக் லைஃப் சம்பவம் மீண்டும் வைரலாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

