மாரி செல்வராஜின் அடுத்த ஹீரோஸ் இவங்கதான்.... தனுஷ் முதல் இன்பநிதி வரை நீளும் லிஸ்ட்..!
துருவ் விக்ரமை வைத்து பைசன் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள மாரி செல்வராஜ், அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் பேசுகையில் தன்னுடைய கைவசம் உள்ள படங்களையும் குறிப்பிட்டு உள்ளார்.

Mari Selvaraj Upcoming Movies
இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். சாதிய ஒடுக்குமுறைகளை பற்றி பேசிய இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். அப்படமும் ஹிட்டானதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது.
மாரி செல்வராஜின் பைசன்
தொடர்ச்சியாக நான்கு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மாரி செல்வராஜ், ஐந்தாவதாக இயக்கி உள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் மாரி. இப்படத்தில் துருவ் விக்ரம் உடன் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 17-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் மாரி செல்வராஜ்.
மாரி செல்வராஜின் கைவசம் உள்ள படங்கள்
மாரி செல்வராஜ் தன்னுடைய கைவசம் உள்ள படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் தற்போது 3 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் ஒரு படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷும் மாரி செல்வராஜும் இணைய உள்ள படம் இதுவாகும்.
இதையடுத்து நடிகர் கார்த்தியிடமும் கதை சொல்லி ஓகே பண்ணி இருக்கிறார் மாரி செல்வராஜ். அப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்பு உள்ளது.
இன்பநிதியை இயக்கும் மாரி செல்வராஜ்
தனுஷ், கார்த்தியை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்திற்காக தற்போது நடிப்பு பயிற்ச்சி எடுத்து வருகிறார் இன்பநிதி. தன் தந்தை உதயநிதி போல் முதலில் தயாரிப்பில் இறங்கிய இன்பநிதி, ரெட் ஜெயண்ட் மூவிஸின் சி.இ.ஓ-வாக அண்மையில் பொறுப்பேற்றார். இதையடுத்து இட்லி கடை படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டார். அடுத்ததாக கமல் - ரஜினி இணையும் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வரிசையில் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார் இன்பநிதி.