- Home
- Cinema
- மாரி செல்வராஜ் படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? ரிலீஸுக்கு முன்பே கல்லாகட்டும் பைசன் காளமாடன்!
மாரி செல்வராஜ் படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? ரிலீஸுக்கு முன்பே கல்லாகட்டும் பைசன் காளமாடன்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Bison Kaalamaadan Pre Release Business
இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே சாதிய ஒடுக்குமுறைகளை தோலுரித்துக் காட்டி கவனம் ஈர்த்தார். இதையடுத்து, நடிகர் தனுஷ் உடன் கர்ணன் படத்திற்காக கூட்டணி அமைத்த மாரி செல்வராஜ், அப்படத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை திரையில் காட்டி இருந்தார். அப்படமும் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் மாமன்னன் படத்தின் மூலம் அரசியலில் நடக்கும் சாதிய பாகுபாடுகள் பற்றி பேசி அப்ளாஸ் வாங்கினார்.
மாரி செல்வராஜின் அடுத்த படம்
தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் நான்காவதாக வாழை என்கிற திரைப்படத்தை இயக்கினார். இது அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அப்படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து அழாதவர்களே இருக்க முடியாது, அந்த அளவுக்கு மனதை ரணமாக்கியது. இப்படி அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக பைசன் காளமாடன் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடித்துள்ளார்.
தீபாவளிக்கு ரிலீசாகும் பைசன்
பைசன் காளமாடன் திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் கபடி வீரனாக நடித்துள்ளார் துருவ் விக்ரம். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக பா.இரஞ்சித் தான் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் பரியேறும் பெருமாள் திரைப்படம் உருவானது.
பைசன் காளமாடன் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ்
இந்நிலையில், பைசன் காளமாடன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பைசன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் 15 கோடி கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 18 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாம். மேலும் ஓவர்சீஸ் உரிமம் 2 கோடி, தொலைக்காட்சி உரிமம் 5 கோடி என ரிலீசுக்கு முன்பே 40 கோடி வசூலித்துவிட்டதாம். இதுதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் உரிமமும் இனி விற்கப்பட இருக்கிறதாம். இதுபோக தியேட்டர் மூலம் கிடைக்கும் வசூல் என அனைத்தையும் கணக்கிட்டால் பைசன் படம் 100 கோடிக்கு மேல் பிசினஸ் ஆகும் என கூறப்படுகிறது.