துருவ் விக்ரம் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'பைசன்' (காளைமாடன்) திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
தமிழ் சினிமாவில், தொடர்ந்து வலுவான கதைக்களத்தை தேர்வு செய்து இயக்கி வருபவர் மாரி செல்வராஜ். இயக்குனர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ், 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இந்தப் படத்தை பா ரஞ்சித் நீலம் புரோடக்ஷன் மூலம் தயாரித்திருந்த நிலையில், இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷை ஹீரோவாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் கர்ணன். இந்த படத்தை கொடியங்குளம் பிரச்சனையை மையப்படுத்தி இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். இந்த படமும் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், தன்னுடைய மூன்றாவது படத்தில் தமிழக துணை முதல்வர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினார். இது உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படமாகும்.
Bison: துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியானது!

மேலும் இந்த படத்தில் வடிவேலு 'மாமன்னன்' என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். 10 வருடங்களுக்கு பின்னர் நடிக்க வந்த வடிவேலுவுக்கு இது ஸ்ட்ராங் காம்பேக் படமாக அமைந்தது.
கடந்த ஆண்டு, 'வாழை' தோட்டத்தில் பணியாற்றுபவர்களை பற்றியும், சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தியும் இவர் இயக்கிய 'வாழை' படத்தின் மூலம் தன்னுடைய சிறு வயது கஷ்டங்களையும், துயரங்களையும் ரசிகர்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வரும் 'பைசன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை, பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் மற்றும் அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைபடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் துருவ் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளதை பார்க்க முடிகிறது.
