- Home
- Cinema
- Villain : அன்று டெரர் வில்லன்... இன்று காமெடி பீஸ்! வில்லத்தனத்தை மூட்டை கட்டிவிட்டு காமெடிக்கு தாவிய 5 நடிகர்கள்
Villain : அன்று டெரர் வில்லன்... இன்று காமெடி பீஸ்! வில்லத்தனத்தை மூட்டை கட்டிவிட்டு காமெடிக்கு தாவிய 5 நடிகர்கள்
Top 5 Villains : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் டெரர் வில்லனாக மிரட்டியவர்கள் இன்று காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அவ்வாறு நடிக்கு டாப் 5 நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

வில்லனாக நடித்து காமெடியனாக மாறிய டாப் 5 நடிகர்கள்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டால், தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களிலேயே நடிக்க வாய்ப்புகள் வருவது வழக்கம். குறிப்பாக 80 மற்றும் 90களில் வில்லனாக அறிமுகமான பல நடிகர்கள், தங்களின் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை அச்சப்பட வைத்திருக்கின்றனர். அவர்களின் முகத்தைப் பார்த்தாலே படத்தில் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு வில்லத்தனத்தில் தனி முத்திரை பதித்திருந்தனர்.
ஆனால், காலப்போக்கில் அதே நடிகர்கள் தங்களின் நடிப்புப் பாதையை மாற்றிக்கொண்டு நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் அசத்தத் தொடங்கினர். ஒருகாலத்தில் ஹீரோக்களுக்கே சவால் விட்ட இவர்கள், இன்று தங்களின் நகைச்சுவையான வசனங்களாலும் உடல்மொழியாலும் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றனர். அந்த வகையில், வில்லத்தனத்தில் தொடங்கி காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பிலும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற ஐந்து தமிழ் நடிகர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
மன்சூர் அலிகான்
90களில் தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும் முக்கியமான முகங்களில் ஒருவர் மன்சூர் அலிகான். தனது முரட்டுத்தனமான தோற்றம், ஆக்ரோஷமான வசன உச்சரிப்பு மற்றும் வித்தியாசமான உடல்மொழியால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். குறிப்பாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தில் வீரபத்திரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்திருந்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால், காலப்போக்கில் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் இருந்து விலகி, நகைச்சுவை கலந்த வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தனது வித்தியாசமான வசன உச்சரிப்பு மற்றும் இயல்பான உடல்மொழியை நகைச்சுவைக்குப் பயன்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். ஒருகாலத்தில் திரையில் அச்சுறுத்திய மன்சூர் அலிகான், பின்னர் தனது கலகலப்பான நடிப்பாலும் கவனம் ஈர்க்கத் தொடங்கினார்.
ஆனந்த் ராஜ்
தமிழ் சினிமாவில் வில்லத்தனத்திற்குப் பெயர்போன நடிகர்களில் ஆனந்த் ராஜுக்கு எப்போதுமே தனி இடமுண்டு. 90களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய இவர், தனது கம்பீரமான தோற்றத்தாலும் அதிரடியான வசனங்களாலும் ரசிகர்களிடம் பிரபலமானார். ரஜினிகாந்தின் 'பாட்ஷா' திரைப்படத்தில் இந்திரன் கதாபாத்திரத்தில் நடித்த இவரது வில்லத்தனம் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. அதேபோல் சரத்குமார் நடித்த 'சூரியவம்சம்', 'சிம்மராசி', 'பாட்டாளி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், அதே ஆனந்த் ராஜ் பின்னாளில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். குறிப்பாக 'நானும் ரவுடிதான்', 'மரகத நாணயம்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ஜாக்பாட்' போன்ற திரைப்படங்களில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. வில்லத்தனத்துடன் காமெடியையும் கலந்து நடிப்பதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய ஆனந்த் ராஜ், எந்த மாதிரியான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
மொட்டை ராஜேந்திரன்
தனித்துவமான கரகரப்பான குரல், மொட்டைத் தலை மற்றும் மிரட்டலான தோற்றம் என தமிழ் சினிமாவில் எளிதில் அடையாளம் காணக்கூடிய நடிகர்களில் ஒருவர் மொட்டை ராஜேந்திரன். பாலா இயக்கத்தில் வெளியான 'நான் கடவுள்' திரைப்படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார். அந்தப் படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதன் பிறகு இவரது திரைப்பயணமே வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' போன்ற படங்களில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் தோன்றிய இவர், தொடர்ந்து காமெடி நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானார்.
குறிப்பாக 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் மதுமிதாவுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒருகாலத்தில் ரசிகர்களை அச்சுறுத்திய இவரது கரகரப்பான குரலே, பின்னாளில் நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பெரும் பலமாக மாறியது. வில்லனாக மட்டுமின்றி காமெடி நடிகராகவும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
பசுபதி
தமிழ் சினிமாவில் எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கும் திறமையான நடிகர்களில் ஒருவர் பசுபதி. ஆரம்பகாலத்தில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த இவர், கமல்ஹாசனின் 'விருமாண்டி' திரைப்படத்தில் கொத்தாளத் தேவர் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். அதேபோல் விக்ரம் நடித்த 'தூள்' படத்திலும், விஜய்யின் 'திருப்பாச்சி' திரைப்படத்தில் பட்டாசு பாலு கதாபாத்திரத்திலும் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், வில்லன் என்ற ஒரே அடையாளத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் தனது நடிப்புத் திறமையைப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார்.
'வெயில்', 'ஈ', 'வெடிகுண்டு முருகேசன்' உள்ளிட்ட திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த இவர், 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். மிரட்டலான வில்லன், நகைச்சுவை நடிகர், பாசமான மனிதர், கண்டிப்பான பயிற்சியாளர் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதுதான் பசுபதியின் தனிச்சிறப்பு.
லிவிங்ஸ்டன்
தமிழ் சினிமாவில் வில்லனாகத் தொடங்கி கதாநாயகனாகவும், பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் வெற்றி பெற்றவர் லிவிங்ஸ்டன். 1988ஆம் ஆண்டு வெளியான 'பூந்தோட்ட காவல்காரன்' திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து சில திரைப்படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்த இவர், பின்னர் கதாநாயகனாகவும் தனது திறமையை நிரூபித்தார். 'சுந்தர புருஷன்', 'சொல்லாமலே', 'விரலுக்கேத்த வீக்கம்', 'என் புருஷன் குழந்தை மாதிரி', 'எங்களுக்கும் காலம் வரும்' உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்தன.
குறிப்பாக 90களின் இறுதியில் இருந்து நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். 'தில்லாலங்கடி', 'காவலன்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'மகளிர் மட்டும்' போன்ற திரைப்படங்களிலும் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்து, பின்னர் காமெடியிலும் கலக்கிய லிவிங்ஸ்டனின் திரைப்பயணம் அவரது பன்முக நடிப்புத் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

