பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாததால் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘பொன்னியின் செல்வன் 2’- எப்போ வரப்போகுது தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட படைப்பு தான் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய நாவலை தழுவி இப்படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். இப்படத்தை லைகா நிறுவனம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, சோபிதா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்த படக்குழு அதன் முதல் பாகத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் செய்தனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு செய்த அளவு இரண்டாம் பாகத்திற்கான புரமோஷனை செய்யாததால், அது படத்தின் வசூலிலும் எதிரொலித்தது. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.300 கோடிக்கு மேல் மட்டுமே வசூலித்துள்ளது. தற்போது புதிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி உள்ளதால், பொன்னியின் செல்வனுக்காக திரையரங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்ததுள்ளன. இதனால் இப்படம் ரூ.350 கோடி வசூலிக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.
இதையும் படியுங்கள்... லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு - பின்னணி என்ன?
பொதுவாக புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களை 28 நாட்களுக்கு பின்னர் ஓடிடியில் வெளியிடலாம் என்கிற விதி உள்ளது. பெரிய அளவில் வரவேற்பை பெறும் படங்கள் மட்டும் சற்று தாமதமாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும். அவ்வாறு தான் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரியளவில் பிக்-அப் ஆகாததால், அப்படத்தை 28 நாட்களிலேயே ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மே 26-ந் தேதி முதல் இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் ரெண்டல் முறையில் கண்டுகளிக்க முடியும் என்றும், ஜூன் 2-ந் தேதி முதல் அனைத்து சந்தாதாரர்களும் இப்படத்தை இலவசமாக கண்டுகளிக்க முடியும் என தகவல் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.125 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சிஎஸ்கே-வை வீழ்த்திய கையோடு சூப்பர்ஸ்டார் வீட்டுக்கு விசிட் அடித்த கொல்கத்தா வீரர்கள் - வைரலாகும் போட்டோஸ்