- Home
- Cinema
- மதராஸி பிரபல பாலிவுட் நடிகருக்காக எழுதிய கதை... ஷாக்கிங் சீக்ரெட்டை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்..!
மதராஸி பிரபல பாலிவுட் நடிகருக்காக எழுதிய கதை... ஷாக்கிங் சீக்ரெட்டை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்..!
மதராஸி திரைப்படம் சிவகார்த்திகேயனுக்காக எழுதியது இல்லை என்றும் இப்படத்தின் கதை பிரபல பாலிவுட் நடிகருக்காக எழுதியதாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறி உள்ளார்.

Madharasi Movie First Choice
2008 ஆம் ஆண்டு வெளியான கஜினி படத்தின் இந்தி ரீமேக்கை ஆமிர் கானுடன் இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தி சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக கஜினி அமைந்தது. அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் படம் இயக்கும் வாய்ப்பு முருகதாஸுக்கு கிடைத்தது. ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்ற இருந்த ஒரு படம் குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
மதராஸி ஷாருக்கானுக்காக எழுதியது
செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம், பல ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானுக்காக எழுதியது என ஏ.ஆர்.முருகதாஸ் கூறி உள்ளார். கஜினிக்குப் பிறகு, மதராஸி பட கதையை ஷாருக்கானிடம் முருகதாஸ் கூறியிருந்தாராம். படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க ஷாருக்கானும் அவரது குழுவும் அவகாசம் கேட்டிருந்தனர். ஒரு வாரம் கழித்து, படம் குறித்த விவரங்களுக்கு ஷாருக்கானின் குழுவினருக்கு தொடர்ந்து செய்தி அனுப்பியும் எந்த பதிலும் வராததால், அந்த படத்திலிருந்து விலகினேன் என்று ஒரு பேட்டியில் முருகதாஸ் தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் புகழாரம்
மதராஸி படத்தின் கதைப்படி அதன் ஹீரோவுக்கு ஒரு இயல்பான நடிப்பு தேவைப்பட்டது, அதை சிவகார்த்திகேயன் சிறப்பாக செய்துள்ளார் என்றும் முருகதாஸ் கூறினார். முருகதாஸின் துப்பாக்கி படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் பாலிவுட்டில் நாயகனாக பல படங்களில் நடித்த வித்யுத் ஜம்வால் மீண்டும் தமிழில் வில்லனாக நடிக்கிறார் என்பது மதராஸி படத்தின் கூடுதல் சிறப்பு. சிவகார்த்திகேயனுடன், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிஜு மேனனும் நடிக்கிறார். அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிஜு மேனனின் நடிப்பைப் பார்த்துதான் அவரை இந்த படத்தில் நடிக்க வைத்ததாக முருகதாஸ் கூறினார்.
ரிலீசுக்கு தயாரான மதராஸி
அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் இளமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மதராஸி திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மதராஸி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அமரன் என்கிற மாஸ் வெற்றி படத்துக்கு பின் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் இது என்பதால் இதற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.