- Home
- Cinema
- முதல் மனைவியோடு மகளிர் ஆணையத்தில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்... புது குண்டை தூக்கிப்போட்ட ஜாய் கிரிசில்டா
முதல் மனைவியோடு மகளிர் ஆணையத்தில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்... புது குண்டை தூக்கிப்போட்ட ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் பேரில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இன்று சென்னையில் உள்ள மகளிர் ஆணையத்தில் தன் மனைவி ஸ்ருதி உடன் ஆஜர் ஆனார்.

Madhampatty Rangaraj vs Joy Crizildaa
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி ஆடை வடிவமைப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மகளிர் ஆணையத்தை நாடினார் ஜாய். இதையடுத்து விசாரணையை தொடங்கிய மகளிர் ஆணையம், மாதம்பட்டி ரங்கராஜ் அக்டோபர் 15ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது. ஆனால் நேற்று ஆஜர் ஆக முடியாததால் ஒரு நாள் அவகாசம் கேட்டிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்
இந்த நிலையில், இன்று மாதம்பட்டி ரங்கராஜ், மகளிர் ஆணையத்தில் ஆஜராக வந்திருந்தார். அப்போது அவரின் மனைவி ஸ்ருதியுடன் உடன் வந்திருந்தார். இருவரும் கைகோர்த்தபடி உள்ளே சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜை தொடர்ந்து ஜாய் கிரிசில்டாவும் விசாரணைக்காக ஆஜர் ஆனார். இதனால் மகளிர் ஆணைய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் கிரிசில்டா, மிகவும் சிரமப்பட்டு காரில் இருந்து இறங்கி வந்து விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்
மகளிர் ஆணையத்தில் ஆஜராகும் முன்பாக நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் ஜாய் கிரிசில்டா தரப்பு கோர்ட்டுக்கு வெளியிலேயே இந்த பிரச்சனையை பேசி முடிக்க முயல்வதாகவும், ஆனால் நான் இதை சட்டப்படி நீதிமன்றம் வாயிலாக தான் எதிர்கொள்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், அவதூறான கருத்துக்களுடன் கூடிய இந்த அறிக்கையை நீக்கக் கோரி ஜாய் கிரிசில்டா தரப்பில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு அடுத்த ஆப்பு
இந்த விவகாரத்தை கோர்ட்டுக்கு வெளியே பேசி முடித்துக் கொள்வதாக தங்கள் தரப்பு கூறியதாக மாதம்பட்டி ரங்கராஜ் சொல்வது பொய் என்றும், இந்த அறிக்கையை மாதம்பட்டி ரங்கராஜ் திரும்பப் பெறுவதோடு, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கோர்ட்டுக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளலாம் என தங்களை அணுகியவர்கள் யார் என்கிற விவரத்தை மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட வேண்டும் என்றும், தவறினால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜாய் கிரிசில்டா அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.