ஜோரா கைய தட்ட ரெடியா இருங்க! மே 16ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் 4 காமெடி படங்கள்
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக நான்கு காமெடி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

Theatre Release Movies on May 16
மே மாதம் தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் புதுப்புது படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன. மே 1ந் தேதி ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் பேமிலி படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், மே 9ந் தேதி 10 சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகின. இந்த நிலையில், வருகிற மே 16ந் தேதி நான்கு காமெடி நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டிடி நெக்ஸ்ட் லெவல்
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் கெளதம் மேனன், கஸ்தூரி, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரித்து உள்ளார். இப்படம் வருகிற மே 16ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது சந்தானத்தின் சூப்பர் ஹிட் காமெடி படமான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.
மாமன்
மே 16ந் தேதி சந்தானத்துக்கு போட்டியாக சூரியும் களமிறங்க உள்ளார். அவர் ஹீரோவாக நடித்த மாமன் திரைப்படம் அன்றைய தினம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் கதையும் சூரி உடையது தான். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சுவாசிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார்.
ஜோரா கைய தட்டுங்க
சூரி, சந்தானத்தை போல் யோகிபாபு நாயகனாக நடித்த ஜோரா கைய தட்டுங்க திரைப்படமும் மே 16ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை வினீஷ் மில்லேனியம் இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் ஷாந்தி ராவ் நடித்துள்ளார். இப்படத்திற்கு அருணகிரி இசையமைத்து உள்ளார். ஜாகிர் அலி தயாரித்துள்ள இப்படத்தில் மேஜிக் மேன் ஆக நடித்துள்ளார் யோகிபாபு. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மது அம்பத் பணியாற்றி உள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ் ரீ-ரிலீஸ்
சந்தானம், சூரி, யோகிபாபு மட்டுமல்ல காமெடி கிங் வடிவேலு நடித்த படமும் மே 16ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அது வேறெதுவுமில்லை, மலையாள இயக்குனர் தாஹா இயக்கத்தில் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் தான். அப்படம் மே16ந் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் காமெடி காட்சிகள் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை என்பதால் இதற்கும் தியேட்டரில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.