தியேட்டரில் அட்டர் பிளாப்; ஆனா ஓடிடியில் சூப்பர் ஹிட்! தக் லைஃப் செய்த தரமான சம்பவம்!
தியேட்டரில் படுதோல்வியை சந்தித்த கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளி சாதனை படைத்து உள்ளது.

Thug Life Movie Hit on OTT
நாயகன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடிகை அபிராமி நடித்திருந்தார். அதேபோல் அவரின் வளர்ப்பு மகனாக சிம்புவும், அவரின் கள்ளக் காதலியாக திரிஷாவும் நடித்திருந்தார். இவர்களுடன் நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, சானியா மல்கோத்ரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த ஜூன் மாதம் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான தக் லைஃப்
தக் லைஃப் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் மொழி சர்ச்சை காரணமாக இப்படம் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. அங்கு ரிலீஸ் ஆகாததால், ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மற்ற மொழிகளில் இப்படம் கிளிக் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தியேட்டரில் படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்
ஆனால் படத்தின் ரிசல்ட் அப்படியே தலைகீழாக இருந்தது. மணிரத்னமா இப்படி ஒரு படத்தை எடுத்தார் என பலரும் கேள்வி எழுப்பும் அளவுக்கு கடுமையான ட்ரோல்களை சந்தித்தது தக் லைஃப். இப்படம் திரையரங்குகளின் வாயிலாக 100 கோடி கூட வசூலிக்கவில்லை. இப்படத்தால் கமலுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தியேட்டரில் சொதப்பிய தக் லைஃப் திரைப்படத்தை நான்கே வாரத்தில் ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பிவிட்டனர். இப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 8 வாரங்களுக்கு பின் தான் ஓடிடியில் வெளியிடுவோம் என டீல் போட்டிருந்தார் கமல். ஆனால் படத்தின் மோசமான ரிசல்ட் காரணமாக வேறுவழியின்றி 4 வாரத்திலேயே ஓடிடியில் ரிலீஸ் ஆனது தக் லைஃப்
ஓடிடியில் முதலிடம் பிடித்த தக் லைஃப்
தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூலை 3ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. தியேட்டரை காட்டிலும் இப்படத்திற்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் 24 லட்சம் பார்வைகளுடன் இந்திய அளவில் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இரண்டாம் வாரத்தில் அதைவிட கூடுதலாக வியூஸ் அள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது தக் லைஃப். ஜூலை 7ந் தேதி முதல் 13ந் தேதி வரை இப்படத்திற்கு 33 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. தியேட்டரில் பிளாப் ஆனாலும் ஓடிடியில் தக் லைஃப் அதிக வியூஸ் அள்ளி வருவதால் படக்குழு சற்று உற்சாகம் அடைந்துள்ளனர்.