- Home
- Cinema
- Flash Back: ரஜினிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது.. ஜெயலலிதா போட்ட ஆர்டர்..நடந்தது என்ன?
Flash Back: ரஜினிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது.. ஜெயலலிதா போட்ட ஆர்டர்..நடந்தது என்ன?
‘பாபா’ பட ஷூட்டிங்கின் போது ரஜினிக்கு அதிமுகவினரால் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது ஜெயலலிதா ரஜினிக்கு ஆதரவாக முக்கிய ஆர்டர் ஒன்றைப் போட்டதாகவும் ராதாரவி சுவாரஸ்ய தகவல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Jayalalithaa Rajinikanth Fight
1990 காலகட்டத்தில் அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் மோதல் போக்கு நிலவியது. அந்த காலம் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய காலகட்டமாக பார்க்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டில் ‘பாஷா’ திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என்று பேசினார். அவர் பேசியபோது மேடையில் அதிமுக அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் இருந்தார். இது ஜெயலலிதாவை கடும் கோபத்திற்கு உள்ளாகியது. இதன் விளைவாக ஜெயலலிதா ஆர்.எம் வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதுவே ஜெயலலிதாவை ரஜினி எதிர்ப்பதற்கான ஆரம்ப புள்ளி. ஆர்.எம்.வீரப்பனை நீக்கியதால் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க சூழல் ஏற்பட்டதாக ரஜினியே பின்னாளில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
ஜெயலலிதாவை பகைத்துக் கொண்ட ரஜினி
இந்த சம்பவத்திற்கு முன்பாக 1992 ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் உள்ள ரஜினி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது, ஜெயலலிதாவின் வீடு உள்ள பகுதி என்பதால் ரஜினியின் கார் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இது ரஜினியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து 1993 இல் வெளியான ‘உழைப்பாளி’ மற்றும் 1994 இல் வெளியான ‘வீரா’ ஆகிய ரஜினி படங்களின் வெளியீட்டில் அரசு தரப்பில் இருந்து மறைமுக தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்தே அரசு குறித்து ரஜினி ‘பாஷா’ வெற்றி விழாவில் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து, ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் மோதல் முற்றியது.
ஜெயலலிதா - ரஜினி வார்த்தை மோதல்
1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, “பணம் கொடுப்பவர்கள் மட்டுமே ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற முடியும்” என்று ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார். இது ஜெயலலிதாவிற்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ஜெயலலிதா, ரஜினிகாந்த் படங்களில் நடிப்பதற்காக கருப்பு பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு கூறினார். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தான் கருப்பு பணம் வாங்கியது உண்மைதான். ஆனால் தவறு செய்ததை உணர்ந்து அதை குறைத்துக் கொண்டதாக கூறி தமிழகத்தை அதிர வைத்தார். தொடர்ந்து “1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்று அறிக்கை வெளியிட்டார்.
ரஜினியால் தோல்வியைத் தழுவிய ஜெயலலிதா
ரஜினிகாந்தின் இந்த அறிக்கை 1996 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது. திமுக - தமாகா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. திமுக 173 இடங்களிலும், மூப்பனாரின் தமாகா 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி 221 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்தித்தது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா படுதோல்வியைத் தழுவினார். அந்த தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதன் பின்னர் ஜெயலலிதா உடன் சமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள ரஜினி முயற்சி செய்தார். மனைவி லதாவுடன் ஜெயலலிதாவை சந்தித்து மந்திராலய பூஜை பிரசாதத்தை கொடுத்தார். ஜெயலலிதாவும் அதை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு இருவரும் நல்லுறவைப் பேணி வந்தனர். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரான போது அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ‘ஜெயலலிதா ஒரு தைரிய லட்சுமி’ என்று ரஜினி புகழ்ந்து பேசினார்.
‘பாபா’ ஷூட்டிங் பிரச்சனை
அதன் பின்னர் ஜெயலலிதாவின் இறப்பு வரை ரஜினியும் ஜெயலலிதாவும் சுமூகமான நட்பை பேணி வந்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு சங்கடம் ஏற்பட்டபோது ஜெயலலிதா செய்த உதவி குறித்து ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ‘பாபா’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது அதிமுகவினர் சிலர் அங்கு சென்று பிரச்சனை செய்துள்ளனர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அந்த தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ராதாரவியை அழைத்து, நம் கட்சிக்காரர்கள் பாபா ஷூட்டிங்கில் பிரச்சனை செய்கிறார்களாம். அங்கு சென்று என்ன நடக்கிறது என்று பாருங்கள் ரஜினிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.
ரஜினிக்கு ஆதரவாக நின்ற ஜெயலலிதா
தொடர்ந்து ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குச் சென்று ரஜினியை சந்தித்த ராதாரவி, நீங்கள் தைரியமாக ஷூட்டிங் நடத்துங்கள். என்ன நடந்தாலும் அரசாங்கம் உங்களுடன் இருக்கும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட ரஜினி மிகவும் சந்தோஷப்பட்டுள்ளார். இந்த தகவலை ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.