ரஜினியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த 5 படங்கள்
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் சில படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஐந்து படங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ராகவேந்திரா - Raghavendra (1985)
எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், லக்ஷ்மி, நிஷாகா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ‘ராகவேந்திரா’. ரஜினியின் நூறாவது படமான இது ராகவேந்திர ஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ராகவேந்திரர் என்றாலே ரஜினியின் முகம் நினைவுக்கு வரும் அளவிற்கு ரஜினி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் இந்த படம் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது. ரஜினியின் வழக்கமான அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் ஆன்மீக படமாக இருந்ததால் ரசிகர்களை இந்த படம் பெரிதும் கவரவில்லை. இருப்பினும் பின் நாட்களில் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்த்த திரைப்படமாக ‘ராகவேந்திரா’ மாறியது.
வள்ளி - Valli (1993)
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரியா ராமன், ஹேமந்த் ரத்தோர் ஆகியோர் நடிப்பில் கே நடராஜ் இயக்கிய திரைப்படம் ‘வள்ளி:. இந்த திரைப்படத்தை ரஜினிகாந்த் தானே எழுதி தயாரித்திருந்தார். மேலும் அவர் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தயாரிப்பாளரான ரஜினிக்கு இந்த படத்தின் காரணமாக பெரும் நஷ்டம் ஏற்பட்டது. படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை ரசிகர்களை பெரிதும் கவராமல் போனதே இந்த படம் தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களாக கூறப்பட்டது.
பாபா - Baba (2002)
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, விஜயகுமார், முரளி ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. திரைப்படத்தின் கதை, திரைக்கதையை ரஜினிகாந்த் எழுதி, தயாரித்து நடித்தார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ரஜினிகாந்தின் வழக்கமான அதிரடி, நகைச்சுவை, ஆக்ஷன் காட்சிகள் குறைவாக இருந்ததும் கதை குழப்பமானதாக இருந்ததும் படத்தின் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டது. ஆன்மீகம் மற்றும் தத்துவார்த்த கூறுகளைக் கொண்டிருந்த இந்த படம் சரியான வரவேற்பு பெறவில்லை. விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பின்னர் ரஜினிகாந்த் சரி செய்தார்.
குசேலன் - Kuselan (2008)
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, வடிவேலு, பசுபதி, பிரபு, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘குசேலன்’. இந்த திரைப்படம் மலையாள படமான ‘கதா பறையும் போல்’ படத்தின் ரீமேக் ஆகும். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் இது ரஜினி படம் என்றே விளம்பரம் செய்யப்பட்டது. எனவே படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதனால் படம் வசூலில் படுதோல்வியை சந்தித்தது. ரஜினிகாந்த் படத்தில் குறைந்த நேரமே தோன்றியது, படத்தின் திரைக்கதை உள்ளிட்டவை ரசிகர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தது. இதுவே இந்த படத்தின் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டது.
தர்பார் - Darbar (2020)
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தர்பார்’. இந்த படம் வெளியாவதற்கு முன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெரிய வெளியான பின்பு படம் கலவையான விமர்சனங்களையேப் பெற்றிருந்தது. இந்த படம் உலக அளவில் ரூ.275 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் தயாரிப்பு, விளம்பரச் செலவு, விநியோக உரிமை ஆகியவை அதிகமாக இருந்ததால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமான ரஜினி பாணி அதிரடி மட்டுமே படத்தில் இருந்தது, புதுமை இல்லாதது, லாஜிக் மீறல்கள், ரஜினியின் வயதுக்கேற்ற கதாபாத்திரமாக இல்லாமல் போனது போன்ற காரணங்களால் இந்த படம் தோல்வியைத் தழுவியது.