சந்திரபாபுவை எம்.ஜி. ஆர் பழிவாங்கினாரா? உச்சத்தில் இருந்த சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
சந்திரபாபுவின் வீழ்ச்சிக்க்கு என்ன காரணம்? எம்.ஜி. ஆர் சந்திரபாபுவை பழிவாங்கினாரா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோர் நடிகர்கள் இருந்தாலும், காலத்தை கடந்து தனித்து நிற்கும் வெகு சில நடிகர்களில் நடிகர் சந்திரபாபுவும் ஒருவர். வெறும் நகைச்சுவை நடிகர் என்று மட்டும் சந்திரபாபுவை சுருக்கிவிட முடியாது. பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அவர் நன்றாக பாடுவார், ஆடுவார், பாடல் எழுதுவார், ஆங்கில பாணியில் இசையமைக்கும் திறமையும் கொண்டிருந்தார். ஆனால் அவ்வளவு எளிதாக அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜெமினி ஸ்டூடியோவில் வாய்ப்பு கிடைக்காததால் அங்கே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஒரு வழியாக 1947-ம் ஆன்ண்டு தன அமராவதி படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு சென்றார்.
ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய சோகப்பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டது என்றால் அது சந்திரபாபுவின் பாடல்கள் தான். மேலும் அந்த காலக்கட்டத்தில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்திரபாபு தான். ஒரு வார கால்ஷீட்க்கு அவர் அப்போதே ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினார். சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆகியோரின் படங்கள் என்றாலே அதில் சந்திரபாபு இடம்பெறுவார். சந்திரபாபு தங்கள் படத்தில் நடித்துவிட்டாலே படம் சூப்பர் ஹிட் என்று தயாரிப்பாளர்கள் அவரின் கால்ஷீட்க்காக காத்திருந்த காலம் இருந்தது.
இப்படி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த சந்திரபாபு பின்னாளில் வறுமையில் வாடி , கடைசி காலத்தில் உணவுக்கே கஷ்டப்பட்டுள்ளார். சந்திரபாபுவின் வீழ்ச்சிக்க்கு என்ன காரணம்? எம்.ஜி. ஆர் சந்திரபாபுவை பழிவாங்கினாரா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சினிமாவில் தனக்கு எல்லாமே தெரியும் என்ற சந்திரபாபுவின் கலை கர்வம் தான் அவரின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசும் சந்திரபாபு அப்போது உச்சத்தில் இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோரை பகைத்துக்கொண்டார்.
ஒருமுறை குடிபோதையில் பேட்டிக்கொடுத்த சந்திரபாபு ஜெமினி கணேசனுக்கு ஆரம்பத்தில் நான் தான் நடிக்க சொல்லிக்கொடுத்தேன், ஆனால் பல ஆண்டுகளாக அவரின் நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து சிவாஜி பற்றி பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சிவாஜி ஒரு நல்ல நடிகர் தான். ஆனால் அவரை சுற்றி ஒரு ஜால்ரா கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டத்தை அனுப்பிவிட்டால் அவர் பெரியளவில் வரலாம் என்று கூறினார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் “ எம்.ஜி.ஆர் ஒரு மருத்துவமனை கட்டுவதாக கேள்விப்பட்டேன். பேசாமல் அவர் நடிப்பதற்கு பதில் அந்த மருத்துவமனையில் கம்புவண்டராக போகலாம் என்று கூறிவிட்டார். சந்திரபாபுவின் இந்த கருத்துகள் அனைத்து அடுத்த நாள் பத்திரிகையில் வெளிவர இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆகியோர் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். இதனால் அவர்களின் படங்களில் சந்திரபாபுவை நடிக்க வைப்பதை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதான் சந்திரபாபுவின் வீழ்ச்சியின் தொடக்கமாக கருதப்படுகிறது.
அன்றைய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரை பகைத்துக்கொண்டால் யாரும் சினிமாத்துறையில் நிலைத்து நிற்க முடியாது என்று கூறப்பட்டது. அப்படி எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு ஆளாகி சந்திரபாபு பழிவாங்கப்பட்ட்தாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆரம்பகால எம்.ஜி.ஆர் படங்களில் சந்திரபாபு நடிக்கும் போது, சந்திரபாபுவின் காமெடி காட்சிகளுக்கு திரையரங்குகளில் பலரும் விசிலடித்து, கைதட்டி கொண்டாடி உள்ளனர். இது எம்.ஜி.ஆருக்கு சிறிது கோபத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் தனது படத்தில் சந்திரபாபு நாயுடு இருக்கக்கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சில நேரங்களில் எம்.ஜி.ஆர் சொல்வதை சந்திரபாபு கேட்கமாட்டாராம். இதுவும் எம்.ஜி.ஆரின் கோபத்தை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஒரு படத்தை இயக்க வெண்டும் என்று சந்திரபாபுவுக்கு ஆசை வந்துள்ளது. அப்போது எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கினால் படம் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர் கூற, அதை கேட்டு சந்திரபாபு மாடி வீட்டு ஏழை என்ற கதையை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். எம்.ஜி.ஆருக்கும் அந்த கதை பிடித்து போக படத்தில் நடிக்க ஓ.கே சொல்லிவிட்டார்.
அதன்பிறகு சந்திரபாபு தன்னை பற்றி பத்திரிகையில் கூறிய கருத்துகள் குறித்து கேட்டுள்ளார். அதை வேண்டுமென்றே செய்யவில்லை, இனிமேல் அதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர், 2 கண்டிஷன்களை சந்திரபாபுவிடம் கூறியுள்ளார். ஒன்று இந்த கதையை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது, மற்றொரு இந்த படத்திற்காக கொஞ்சம் சந்திரபாபு காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு ஓ,கே சொன்ன சந்திரபாபு ரூ.25,000 பணத்தை எம்.ஜி.ஆரிடம் அட்வான்ஸாக கொடுத்துள்ளார். பின்னர் படத்தின் பூஜை தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பட பூஜையின் அன்று எம்.ஜி.ஆர் தாமதமாக சென்றுள்ளார். பின்னர் 2.3 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின்னர் எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. இதனிடையே இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த தயாரிப்பாளர் விலக, சந்திரபாபு கடன் வாங்கி பணம் போட்டுள்ளா படப்பணிகளை தொடர்ந்துள்ளார்.
பின்னர் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்ற போது, அவரின் வீட்டில் சந்திரபாபுவை நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சந்திரபாபுவை சந்தித்த எம்.ஜி.ஆர். என்ன விஷயம் என்று கேட்டுள்ளார். அப்போது கால்ஷீட் குறித்து பேச வந்தேன் என்று சந்திரபாபு கூற, கால்ஷீட் விஷயங்களை எல்லாம் என் அண்ணன் சக்ரபாணி தான் பார்க்கிறார். அவரை பார்க்கும்படி கூறியுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த சந்திரபாபு, எம்.ஜி.ஆரின் அண்ணனை சந்திக்க சென்றுள்ளார். அப்போது எங்கள் இஷ்டத்திற்கு தான் கால்ஷீட் கொடுப்போம், என்று கூற அந்த தேதியை சொல்லுங்கள் என்று சந்திரபாபு கேட்க, அதெல்லாம் சொல்ல முடியாது என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் அளவுக்கு சென்றுள்ளது.
அவ்வளவு தான் சந்திரபாபுவின் மொத்த பெயரும் திரைத்துறையில் கெட்டுப்போனது.மறுபுறம் படத்திற்காக சந்திரபாபு வாங்கிய கடனுக்காக அவரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான சந்திரபாபுக்கு குடிப்பழக்கம் அதிகமாகி அவர் நடிக்க இருந்த படங்களில் கூட நடிக்க முடியாமல் போனது. நாளடைவில் கையில் காசு இல்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். வறுமை, குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட உடல்நிலை கோளாறு ஆகியவற்றால் ஒரு நோயாளியாக மரித்துப்போனார் சந்திரபாபு என்று மாபெரும் கலைஞன்..