ஆளுதான் ஒல்லி... ஆனா நடிப்பில் கில்லியாக இருக்கும் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Dhanush Net Worth
அரசியலிலும் சரி... சினிமாவிலும் சரி யாருடைய பின்னணியை கொண்டு அந்த துறைகளில் நுழைந்தாலும், அந்த துறையில் தன்னை நிரூபிக்காவிட்டால், நிலைத்திருக்க முடியாது என்பதே காலம் இதுவரை கற்பித்த பாடமாகும். யாருடைய துணையையாவது கொண்டு அறிமுகமானவர்கள் பலர்... ஆனால் நிலைத்து நின்றவர்களோ சிலர் மட்டுமே. தொடக்கத்தில் விமர்சனங்களை வைத்தவர்கள் வாயாலேயே பாராட்டுக்களை பெறுவது அசாத்தியமானது. அப்படி தன் வாழ்க்கையை விமர்சனங்களில் ஆரம்பித்து, அந்த துறையின் உச்சத்தை தொட்டவர்களில் முக்கியமானவர் தனுஷ்.
தனுஷின் திரைப்பயணம்
தனது தந்தையும், பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக தனுஷ் அறிமுகமானபோது அவருக்கு ஈர்க்கும் முகம் இல்லை. ஒல்லியான தேகம், பார்த்தவுடன் பிடிக்கும்படியான தோற்றம் எதுவும் கிடையாது. கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற காரணத்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனியெல்லாம் அவர் நடிப்பாரா... வாய்ப்பு கிடைக்குமா? அவர் அவ்வளவுதான் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார் தனுஷ். ஆனால் அவரிடம் நம்பிக்கை இருந்தது.
தனுஷின் ஹிட் படங்கள்
ஆள் தான் ஈர்க்கும்படியாக இல்லையே தவிர, அப்போதிருந்த முன்னணி நடிகர்களைக் காட்டிலும் நன்றாகவே நடிக்கும் திறமை இருந்தது. 2002-ல் ஒரு படம் மட்டும் தான், அந்த ஆண்டில் தனுஷுக்கு வேறு படங்கள் எதுவும் இல்லை. அடுத்ததாக 2003-ம் ஆண்டு அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், நடிப்பில் உருவான காதல் கொண்டேன் திரைப்படம் வெளியானது. இந்த படத்திலும் கண்ணாடி அணிந்த சுமாரான தோற்றம் கொண்ட ஒருவன் அழகான பெண் மீது காதல் கொண்டால் எப்படி இருக்கும் என்ற கதைக்கருவின் பின்னணியில் உருவாகி வெளியானது. யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் ஹிட் அடிக்க, தன் நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் தனுஷ்.
அதே ஆண்டில் வெளியான திருடா திருடி திரைப்படம், தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகும். பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம். குறும்பு, அப்பாவுக்கு அடங்காத பிள்ளை என்று ஒரு தமிழ் பையனுக்கு உள்ள குணாதிசியங்கள் எல்லாம் ஈர்க்க, பேமிலி ஆடியன்ஸை மட்டுமல்லாது, இளைஞர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் தனுஷ். குறிப்பாக மன்மதராசா பாடலுக்கு தனுஷின் அட்டகாசமான நடனம் அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது.
தனுஷின் கம்பேக் கதை
இதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், ட்ரீம்ஸ், தேவதையை கண்டேன், அது ஒரு கனாகாலம் என அவர் நடித்த படங்கள் எல்லாம் சொதப்ப, தனுஷின் எதிர்காலம் கேள்விக் குறி ஆனது. ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தனுஷுக்கு மீண்டும் கை கொடுத்தது அவரது அண்ணன் செல்வராகவன் தான். இவர்கள் கூட்டணியில் உருவான புதுப்பேட்டை திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2006-ல் வெளியான இப்படம் வசூல் ரீதியாக சோபிக்காவிட்டாலும், தற்போது வரை தமிழ் திரையுலகில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக பேசப்பட்டு வருகிறது.
பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் தான் தனுஷுக்கு திருப்புமுனையாக அமைந்தது. மீண்டும் ஒரு நடுத்தர குடும்பத்து பையன்களுக்கு உள்ள அதே குணாதிசியம் கொண்ட கதாபாத்திரம், காதல், பைக் மீதான மோகன் என்று அத்தனையும் சி செண்டர் ஆடியன்ஸுக்கான படமாக அமைய, இது பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன்பின் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படமும் அதேபோன்று அதிரிபுதிரியான வெற்றியை ருசித்தது.
பாலிவுட், ஹாலிவுட்டிலும் ஜொலித்த தனுஷ்
இதையடுத்து உத்தம புத்திரன், படிக்காதவன், குட்டி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தாலும் தனுஷை ஒரு தேர்ந்த நடிகனாக காட்டியது ஆடுகளம் திரைப்படம் தான். பொல்லாதவன் மூலம் தனுஷ் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய அதே வெற்றிமாறன் தான், ஆடுகளத்திலும் அதே மேஜிக்கை நிகழ்த்தினார். ஆடுகளம் படத்திற்காக முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் தனுஷ். அதன்பின்னர் மூணு திரைப்படத்தில் அவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் தனுஷை உலகளவில் பிரபலமாக்கியது.
மூணு படம் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த தனுஷ், அடுத்தடுத்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கிச்சட்டை, நானும் ரெளடி தான், காக்கா முட்டை, விசாரணை என தொடர்ந்து ஹிட் படங்களை தயாரித்து அசர வைத்தார். ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷுக்கு பாலிவுட்டிலும் மாஸான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஹாலிவுட்டில் கிரே மேன் போன்ற படங்களில் நடித்து உலகளவில் கொண்டாடப்படும் நடிகர் ஆனார் தனுஷ்.
தனுஷின் சொத்து மதிப்பு
சினிமாவில் தான் மட்டுமின்றி பிறரும் வளர உதவி இருக்கிறார் தனுஷ். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், அனிருத் என்று பல திறமையாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை தனுஷையே சேரும். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என்று எல்லா அவதாரங்களிலும் தனுஷுக்கு வெற்றியே கிட்டியது. அவர் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், தனுஷின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷின் சொத்து மதிப்பு 250 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் கடைசியாக நடித்த குபேரா படத்திற்காக ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். இவருக்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்ட பங்களாவும் உள்ளது. அதன் மதிப்பு ரூ.150 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.