உதயநிதி தொட்டதெல்லாம் ஹிட்! 2022ல் ரெட்ஜெயண்ட் வெளியிட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படங்கள் ஒரு பார்வை
உதயநிதி ஸ்டாலினுக்கு 2022-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்துள்ளது. அரசியல், சினிமா என இரண்டிலும் இந்த ஆண்டு அவர் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். குறிப்பாக சினிமாவில் விநியோகஸ்தராக இவர் வாங்கி வெளியிட்ட படங்களெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. அவற்றில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடாவிட்டாலும், பின்னணியில் இருந்து அப்படத்தின் வெளியீட்டு வேலைகளையெல்லாம் பார்த்தது அந்நிறுவனம் தான். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
விக்ரம்
கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த படம் விக்ரம். கடந்த ஜூன் மாதம் ரிலீசான இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும், வசூலை வாரிக்குவித்தது. இப்படம் மொத்தம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருந்தது. இப்படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டு இருந்தது.
எதற்கும் துணிந்தவன்
சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசான திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டது. இப்படம் ரூ.175 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே மாதம் ரிலீசான டான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. சிபி சக்ரவர்த்தி இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டது.
இதையும் படியுங்கள்... ‘அவதார் 2’ பார்க்க சென்ற ரசிகருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்.. தியேட்டரிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்
திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தையும் உதயநிதி தான் வெளியிட்டு இருந்தார். மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
சர்தார்
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.104 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
ராதே ஷ்யாம்
உதயநிதி வெளியிட்ட படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்றால் அது ராதே ஷ்யாம் தான். பிரபாஸ் நாயகனாக நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்திருந்தாலும், இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய தோல்வி படமாகவும் இது அமைந்தது. ஏனெனில் இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த் 24 ஆண்டுகளாக தக்கவைத்த சாதனையை தகர்த்தெறிந்த ராஜமவுலி! ஜப்பானில் ‘முத்து’வை முந்தியது ஆர்.ஆர்.ஆர்