இன்னும் வெளியாகாத நயன் திருமண வீடியோ... முந்திக்கொண்டு ஹன்சிகா! விரைவில் வெளியாகும் வெட்டிங் வீடியோ!
நடிகை ஹன்சிகாவின் திருமணம், கடந்த டிசம்பர் மாதம் நடந்த நிலையில் இவருடைய திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என டிஸ்னி ஹாட் ஸ்டார் வலைதளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம்ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தன்னுடைய நீண்ட கால நண்பரும் பிசினஸ் பார்ட்னர்மான சோஹைல் கத்தூரியா என்பவரை, டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோடா அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.
ஹன்சிகா -சோஹைல் கதூரியா திருமணத்தில், குறிப்பிட்ட பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சோஹைல் கதூரியா குடும்ப வழக்கப்படி நடந்த, இந்த திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை, ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றியதால், திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் விரைவில், ஹன்சிகாவின் திருமண வீடியோ ஒளிபரப்பாகும் என ஹாட் ஸ்டார் ஓ டி டி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'லவ் ஷாடி டிராமா' என இந்த திருமண நிகழ்ச்சிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆனதிலிருந்து அவ்வபோது தன்னுடைய வெட்டிங் போட்டோ ஷூட், வீடியோக்களை வெளியிட்டு வரும் ஹன்சிகாவின் திருமண வீடியோவும் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை netflix கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதம் ஆகும் நிலையில், இதுவரை திருமண வீடியோ வெளியாகாத நிலையில், திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயே ஹன்சிகாவின் திருமண வீடியோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.