மதுரை கலெக்டரின் கதையை படமாக்கிய ஷங்கர்! யார் இந்த ரியல் ‘கேம் சேஞ்சர்' சேஷன்?
மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய டி.என்.சேஷனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் கேம் சேஞ்சர் படம் எடுக்கப்பட்டு உள்ளது. அவர் யார் என்பதை பார்க்கலாம்.
Real Game Changer Seshan
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் நடிகர் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படத்தின் கதை மதுரை கலெக்டரின் உண்மைக் கதை என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யாவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அந்த கலெக்டர் பெயர் டி.என்.சேஷன். அவர் யார்? அவர் என்ன செய்தார்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
TN Seshan
யார் இந்த டி.என்.சேஷன்?
டி.என்.சேஷன் கடந்த 1933 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தார். பின்னர் 1953 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் பணியில் தேர்ச்சி பெற்ற அவர் அந்த பணியில் சேரவில்லை; அதற்கு பதிலாக, 1954 ஆம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, 1955 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றிய பிறகு, அணுசக்தி ஆணையத்தின் செயலாளராகவும், விண்வெளித் துறையில் இணைச் செயலாளராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். இறுதியில் இந்திய சிவில் சர்வீஸ் படிநிலையில் மிக உயர்ந்த பதவியான கேபினட் செயலாளராகவும் சேஷன் பணியாற்றினார்.
who is TN Seshan
தனது பதவிக் காலத்தில் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுடன் பல முறை மோதி இருக்கிறார் சேஷன். குறிப்பாக 1970 களில், அவர் தமிழ்நாடு தொழில்கள் மற்றும் வேளாண்மைத் துறை செயலாளராக இருந்தபோது, அப்போதைய முதல்வருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த பதவியே வேண்டாம் என ராஜினாமா செய்திருக்கிறார். இதேபோல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தபோது, தெஹ்ரி அணை மற்றும் சர்தார் சரோவர் அணை கட்டும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்தார். கேம் சேஞ்சர் கதை, சேஷனின் வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது, அதில் ஹீரோ ராம்சரண், காவல் துறையை விட ஐஏஎஸ்-ஐ தேர்ந்தெடுப்பது மற்றும் அரசியல்வாதிகளுடன் மோதலில் ஈடுபடுவது ஆகியவை அடங்கும்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பஞ்சர் ஆன கேம் சேஞ்சர்; 2ம் நாள் வசூல் இவ்வளவுதானா?
Former Chief Election Commissioner TN Seshan
டி.என். சேஷன் 1990-96 வரை இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பணியாற்றினார். இந்தியத் தேர்தல்களுக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார், மேலும் பல தேர்தல் சீர்திருத்தங்கலை கொண்டுவந்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானவர். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது அல்லது அவர்களை மிரட்டுவது, தேர்தல்களின் போது மதுபான விநியோகம் செய்வது, பிரச்சாரத்திற்காக அரசு நிதி மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துதல், வாக்காளர்களின் சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுதல், பிரச்சாரங்களுக்கு வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்துதல் போன்ற பல முறைகேடுகளை அவர் தடுத்தார்.
Former IAS TN seshan
தேர்தல் நடத்தை விதிகள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வரையறுக்கப்பட்ட தேர்தல் செலவுகளையும் அறிமுகப்படுத்தியது சேஷன் தான். கடந்த 1992 ஆம் ஆண்டில், தேர்தல் பிரச்சினைகள் காரணமாக பீகார் மற்றும் பஞ்சாபில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களை அவரது தேர்தல் ஆணையம் தைரியமாக ரத்து செய்தது. அவரது பதவிக் காலத்தில், சேஷன் 40,000க்கும் மேற்பட்ட செலவுக் கணக்குகளை மதிப்பாய்வு செய்து 14,000 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருந்தார். அவரது தேர்தல் சீர்திருத்தங்களுக்காக 1996 இல் அவருக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
TN seshan Story
1996 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து டி.என்.சேஷன் ஓய்வு பெற்றார். 1997 ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 1999ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காந்திநகரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற சேஷன், சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனத்திலும், பின்னர் முசோரியில் உள்ள LBSNAA-விலும் தலைமைப் பொறுப்பை வகித்தார். 2019 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் சேஷன் காலமானார். அப்போது அவருக்கு வயது 86.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் என்னுடைய Lifetime Achievement – சமுத்திரக்கனி!