ரெட்ரோவை காலி பண்ண மே 9-ந் தேதி ரிலீஸ் ஆகும் அரை டஜன் தமிழ் படங்கள்!
மே மாதம் இரண்டாவது வாரத்தில் யோகிபாபு நடித்த கஜானா, மோகன்லாலின் தொடரும் உள்பட மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

May 9 Theatre Release Tamil Movies
தமிழ் சினிமாவுக்கு மே மாதம் பிளாக்பஸ்டர் மாதமாக தொடங்கி இருக்கிறது. மே 1ந் தேதி நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரெட்ரோ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில், இந்த படங்களுக்கு ஆப்பு வைக்க வருகிற மே 9-ந் தேதி அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
கஜானா - நிழற்குடை
பிரபதீஸ் சாம்ஸ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், வேதிகா, யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கஜானா. இப்படம் மே 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனுடன் நடிகை தேவையானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நிழற்குடை படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஷிவ ஆறுமுகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜித், கண்மணி, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். குரு தேவ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வாத்தியார் குப்பம் - என் காதலே
ரஹ்மத் ஷாகிப் இயக்கத்தில் ரஷ்மிதா, அந்தோணி தாஸ், கஞ்சா கருப்பு, சாம்ஸ், காலித் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள ‘வாத்தியார் குப்பம்’ திரைப்படமும் வருகிற மே 9-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்துடன் லிங்கேஷ் நாயகனாக நடித்துள்ள ‘என் காதலே’ திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஜெயலட்சுமி இயக்கி உள்ளார். இப்படத்தில் திவ்யா தாமஸ், கஞ்சா கருப்பு, லேயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அம்பி - சவுடு
நகைச்சுவை நடிகராக பல்வேறு படங்களில் கலக்கி வந்த நடிகை ரோபோ சங்கர் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் அம்பி. இப்படத்தை பாஸர் ஜே எல்வின் இயக்கி உள்ளார். இப்படமும் மே 9-ந் தேதி திரைகாண உள்ளது. இதனுடன் ஜெயந்தன் அருணாச்சலம் இயக்கத்தில் போண்டாமணி, பொன்ராம், வைகாசி ரவி, சாப்ளின் பாலு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள சவுடு என்கிற திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
எமன் கட்டளை - தொடரும்
மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடித்துள்ள படம் ‘எமன் கட்டளை’. இப்படத்தை ராஜசேகர் இயக்கி உள்ளார். கார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படமும் மே 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்துடன் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட துடரும் திரைப்படம் வருகிற மே 9-ந் தேதி தொடரும் என்கிற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியாக உள்ளது.