கோலிவுட் நாயகர்களின் முதல் 100 கோடி வசூல் படங்கள் ஒரு பார்வை!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் நடித்து முதன்முதலில் 100 கோடி வசூல் அள்ளிய படங்கள் பற்றி பார்க்கலாம்.

First 100 Crore Movies of Tamil Actors
சினிமாவில் தற்போது 100 கோடி வசூல் என்பது அசால்டான விஷயமாக மாறிவிட்டது. சின்ன பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி வசூலை எட்டிவிடுகின்றன. ஆனால் ஒரு காலகட்டத்தில் கோலிவுட்டுக்கு அது எட்டாக்கனியகவே இருந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் முதன்முதலில் 100 கோடி வசூல் அள்ளிய படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி கோலிவுட்டில் முதல் 100 கோடி வசூல் அள்ளிய ஹீரோ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
முதன்முதலில் 100 கோடி கிளப்பில் இணைந்த ரஜினிகாந்த்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் தான் கோலிவுட்டின் முதல் 100 கோடி வசூல் செய்த படமாகும். இப்படத்திற்கு பின்னர் அந்த மைல்கல்லை எட்டியவர் கமல்ஹாசன். கடந்த 2008-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்த தசவதாரம் திரைப்படம் தான் கமலின் முதல் 100 கோடி வசூல் படமாகும். கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்யோ அல்லது அஜித்தோ தான் இந்த 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பார்கள் என நினைக்கலாம். ஆனால் அவர்களுக்கு முன் நடிகர் சூர்யா 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டார்.
விஜய் - அஜித்தின் முதல் 100 கோடி வசூல் படம் எது?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் தான் அவரின் முதல் 100 கோடி வசூலித்த திரைப்படமாகும். சூர்யாவை தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு துப்பாக்கி படம் மூலம் 100 கோடி கிளப்பில் இணைந்தார் விஜய். இதற்கு அடுத்த ஆண்டே நடிகர் அஜித்குமார் ஆரம்பம் படம் மூலம் முதன்முறையாக 100 கோடி வசூலை எட்டினார். அஜித்துக்கு அடுத்தபடியாக ஷங்கரின் ஐ படம் மூலம் நடிகர் சியான் விக்ரம் 100 கோடி கிளப்பி இணைந்தார்.
100 கோடி வசூல் அள்ளிய கோலிவுட் ஹீரோக்கள்
விக்ரமை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் காஞ்சனா 2 படம் மூலம் தன் முதல் 100 கோடி வசூல் படத்தை கொடுத்தார். அடுத்ததாக கைதி படத்தின் மூலம் நடிகர் கார்த்தி முதல் முதலில் 100 கோடி வசூல் அள்ளினார். பின்னர் 2021-ம் ஆண்டு டாக்டர் படம் மூலம் சிவகார்த்திகேயனும், 2022ம் ஆண்டு திருச்சிற்றம்பலம் படம் மூலம் தனுஷும் 100 கோடி கிளப்பில் இணைந்தனர். அதே ஆண்டில் லவ் டுடே படம் மூலம் பிரதீப் ரங்கநாதனும் 100 கோடி கிளப்பில் இணைந்தார். 2023-ல் மார்க் ஆண்டனி படம் மூலம் விஷால் முதல் 100 கோடி வசூல் படத்தை கொடுத்தார். பின்னர் 2024-ல் மகாராஜா படம் மூலம் விஜய் சேதுபதியும், அரண்மனை 4 படம் மூலம் சுந்தர் சி-யும் 100 கோடி கிளப்பில் இணைந்தனர்.