ராஜமவுலியிடம் ஸ்ரீதேவி வைத்த டிமாண்ட்... மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாகுபலி சம்பவம்
பாகுபலி படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்க மறுத்தது குறித்து இயக்குனர் ராஜமவுலி தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தற்போது பான் இந்தியா படங்கள் அதிகளவில் வரத் தொடங்கி உள்ளன. இதற்கெல்லாம் ஊந்துகோளாக இருந்த திரைப்படம் பாகுபலி. ராஜமவுலி இயக்கிய இப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த 2017-ம் ஆண்டு வெளியிட்டு முதல் பாகத்தைவிட டபுள் மடங்கு வசூலை வாரிக் குவித்தது.
இந்திய சினிமாவில் அதிக கலெக்ஷனை அள்ளிய படம் என்கிற சாதனையையும் பாகுபலி 2 படைத்தது. இத்தகைய மாபெரும் வெற்றிப்படம் உருவாவதற்கு பெரும் பங்காற்றியது அப்படத்தில் நடித்த நடிகர்கள் தான். அதன்படி இதில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவர்களையெல்லாம் தன் கம்பீர நடிப்பால் ஓவர்டேக் செய்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். ராஜமாதா சிவகாமிதேவியாக அவரது நடிப்பு அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.
அவரைத் தவிர இந்த ரோலில் யாராலும் நடிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு பின்னிபெடலெடுத்து இருந்தார் ரம்யா கிருஷ்ணன். ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் ராஜமவுலி. இப்படத்திற்காக அவர் ஸ்ரீதேவியை அணுகியபோது அவர் வைத்த டிமாண்ட் காரணமாக அவரை நடிக்க வைக்கும் முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டார் ராஜமவுலி.
இதையும் படியுங்கள்... இது சரிப்பட்டு வராது... உஷாராக தீபாவளி ரேஸில் இருந்து விலகிய கார்த்தியின் ‘ஜப்பான்’ - காரணம் என்ன?
இதுகுறித்து அவர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவி தொடர்ச்சியாக டிமாண்ட் வைத்து வந்தார். அவர் தொடர்ச்சியாக இது வேண்டும், அது வேண்டும் என கேட்டதால் ஒருகட்டத்தில் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றினால் எங்களது பட்ஜெட் எகிறிவிடும் என நினைத்தோம். அதனால் தான் ரம்யா கிருஷ்ணனை அணுகினோம். அவரும் திறம்பட நடித்து அசத்திவிட்டார். இதைப்பார்க்கும் போது ஸ்ரீதேவியை நடிக்க வைக்கும் முடிவை நாங்கள் கைவிட்டது நல்லதா போச்சு” என கூறி இருந்தார்.
ராஜமவுலியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு அந்த சமயத்தில் ஸ்ரீதேவியும் பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறுகையில், ராஜமவுலி இப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பொதுவாகவே நான் எந்தவிதமான கோரிக்கையும் வைப்பதில்லை. நடிக்காத படத்தை பற்றி பேசுவதை நான் நாகரீகமற்றதாக நினைக்கிறேன்” என கூறி இருந்தார். அவர்கள் இடையே நடந்த இந்த வார்த்தை மோதல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... முதலில் படத்தை பாருங்க.. அப்புறம் பேசுங்க! தி கேரளா ஸ்டோரி நடிகை அதா ஷர்மா ஓப்பன் டாக்