இது சரிப்பட்டு வராது... உஷாராக தீபாவளி ரேஸில் இருந்து விலகிய கார்த்தியின் ‘ஜப்பான்’ - காரணம் என்ன?
தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் படங்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், தற்போது அந்த ரேஸில் இருந்து முன்னணி நடிகரின் படம் விலகி உள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் மனதில் வருவது பட்டாசு மற்றும் திரைப்படங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் படங்களுக்கு மவுசு அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே அதற்கான போட்டி களைகட்டி உள்ளன. தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். இதுதவிர அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளி ரிலீசுக்காக தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்பு தனுஷின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது.
இதையும் படியுங்கள்... கமுக்கமாக காதலரை அறிமுகம் செய்தாரா கீர்த்தி சுரேஷ்? - காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
அதேபோல் தீபாவளி ரிலீஸுக்காக காத்திருந்த மற்றொரு படம் கார்த்தியின் ஜப்பான். குக்கூ, ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்தாண்டு கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த சர்தார் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், அதே செண்டிமெண்டில் ஜப்பான் படத்தையும் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
தற்போதே தீபாவளி ரிலீசுக்கான போட்டி அதிகரித்துள்ளதால், ஜப்பான் படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டு அப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி உள்ளது. அதன்படி தீபாவளிக்கு முன்னதாகவே செப்டம்பர் மாதம் 14-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஜப்பான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். ஏற்கனவே சந்திரமுகி 2 படம் அந்த நாளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அதற்கு போட்டியாக ஜப்பான் படமும் களமிறங்கி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாததால் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘பொன்னியின் செல்வன் 2’- எப்போ வரப்போகுது தெரியுமா?