- Home
- Cinema
- தூத்துக்குடியில் ரூம் போட்டு... இயக்குனர் ஹரி எழுதிய டம்மி லிரிக்ஸால் டக்குனு ஹிட்டான பாடல் பற்றி தெரியுமா?
தூத்துக்குடியில் ரூம் போட்டு... இயக்குனர் ஹரி எழுதிய டம்மி லிரிக்ஸால் டக்குனு ஹிட்டான பாடல் பற்றி தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி, சினிமாவில் பல வெற்றிப் பாடல்களையும் எழுதி இருக்கிறார். அப்படி அவர் எழுதிய ஒரு ஹிட் பாடலை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

Thaamirabharani Movie Song Secret
தமிழ் சினிமாவில் தரமான கமர்ஷியல் படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் வெகு சிலரே, அந்த பட்டியலில் முன்னணியில் இருப்பவர் தான் இயக்குனர் ஹரி. இவர் எடுத்த படங்கள் அனைத்துமே கமர்ஷியல் படங்கள் தான். கடந்த 2002-ம் ஆண்டு தமிழ் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹரி, அதன்பின்னர் கடந்த 23 ஆண்டுகளில் 17 படங்கள் இயக்கி இருக்கிறார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக விக்ரம், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு மாஸ் ஹீரோ இமேஜை உருவாக்கியதில் இயக்குனர் ஹரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
பாடலாசிரியராகவும் கலக்கும் ஹரி
ஹரி, இயக்குனராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். இவர் இதுவரை 11 பாடல்களை எழுதி இருக்கிறார். குறிப்பாக தான் இயக்கிய தாமிரபரணி, வேல், சேவல், வேங்கை, சிங்கம் 3, யானை ஆகிய படங்களில் மட்டும் தான் பாடல்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன. அப்படி அவர் முதன்முதலில் தாமிரபரணி படத்திற்காக எழுதிய தாலியே தேவையில்லை என்கிற பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தூத்துக்குடியில் ரூம் போட்டு எழுதிய பாட்டு
தாமிரபரணி படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றுக் கொண்டிருக்க, அடுத்ததாக பாடல் காட்சிக்காக பாடல் வரிகள் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு போய் திரும்பி இங்கு வந்தால் லேட் ஆகிவிடும் என்பதால் தானே பாடல் வரிகளை எழுத முடிவு செய்திருக்கிறார் ஹரி. இதற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கி, அவர் எழுதிய பாடல் தான் தாமிரபரணி படத்தில் இடம்பெறும் ‘தாலியே தேவையில்ல’ என்கிற பாடல்.
டம்மி லிரிக்ஸில் உருவான பாடல்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் பாடலை பவதாரணி மற்றும் ஹரிஹரன் இணைந்து பாடி இருந்தனர். இந்தப் பாடலுக்கு இவர்கள் குரலைப் போல், ஹரியின் யதார்த்தமான லிரிக்ஸும் வலு சேர்த்து இருந்தது. இந்த லிரிக்ஸெல்லாம் அவர் ஐயா படத்தில் இடம்பெற்ற ‘ஒரு வார்த்தை’ பாடலுக்காக எழுதிய டம்மி லிரிக்ஸாம். இசையமைப்பாளர்களிடம் இருந்து ட்யூன் வாங்க, டம்மி லிரிக்ஸ் எழுதப்படுவதுண்டு, அப்படி ஹரி அந்த பாடலுக்காக எழுதிய டம்மி லிரிக்ஸை டெவலெப் செய்துதான் தாலியே தேவையில்ல பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். அந்தப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.