வாத்தி கம்மிங்... திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஷாக் கொடுத்த தனுஷின் வாத்தி படக்குழு - எப்போ ரிலீஸ் தெரியுமா
Vaathi movie : நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகும் என கூறப்பட்டாலும், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது அவர் நடித்துள்ள வாத்தி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் அறிமுகமாகி கலக்கிய நடிகர் தனுஷ், டோலிவுட்டில் அறிமுகமாகும் படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தின் நடிகர் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ளது. இதனை தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
வாத்தி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... படம் ரிலீசாகி 3 நாள் கழிச்சு தான் ரிவ்யூ! தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தீர்மானத்தால் கலக்கத்தில் யூடியூபர்ஸ்
வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகும் என கூறப்பட்டாலும், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக உள்ள வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது பலருக்கும் ஆச்சர்யமாக உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் நானே வருவேன் ரிலீஸ் தேதியையும் வெளியிடுமாறு தனுஷுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பெரிய படங்களை வரிசையாக தட்டித்தூக்கும் உதயநிதி... சர்ச்சைகளை தாண்டி சாதித்த Red Giant-ஸின் சக்சஸ் ஸ்டோரி