பெரிய படங்களை வரிசையாக தட்டித்தூக்கும் உதயநிதி... சர்ச்சைகளை தாண்டி சாதித்த Red Giant-ஸின் சக்சஸ் ஸ்டோரி
2022-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் ரெட் ஜெயண்ட்ஸ் ராஜ்ஜியம் தான் என சொல்லும் அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அவர்கள் ரிலீஸ் செய்யும் படங்கள் தான் உள்ளன.
நடிகர் உதயநிதி ஸ்டாலின், முதன்முதலில் தயாரிப்பாளராகத் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் இவர் முதன்முதலில் தயாரித்த படம் குருவி. இதைத் தொடர்ந்து சூர்யா, கமல், சிம்பு என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த உதயநிதி. பின்னர் படிப்படியாக தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் படங்களை வெளியிடவும் தொடங்கினார்.
அவர் முதன்முதலில் வெளியீடு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். இதையடுத்து வருடத்திற்கு 4 படங்கள் அல்லது 5 படங்கள் என வினியோகம் செய்து வந்த அந்நிறுவனம் கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ரஜினியின் அண்ணாத்த மற்றும் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி ரிலீஸ் செய்தது ரெட் ஜெயண்ட்ஸ்.
2022-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் ரெட் ஜெயண்ட்ஸ் ராஜ்ஜியம் தான் என சொல்லும் அளவுக்கு மாதத்துக்கு குறைந்தது ஒரு படங்களையாவது அந்நிறுவனம் வெளியீடு செய்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்கள் பெரும்பாலானவற்றை ரெட் ஜெயண்ட்ஸ் தான் வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... உதயநிதியால் மீண்டும் உயிர்பெறும் விக்ரமின் துருவ நட்சத்திரம்..! மாஸான போட்டோவுடன் கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்
அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படத்தை வெளியிட்டனர். மார்ச் மாதம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் பிரபாஸின் ராதே ஷியாம், ஏப்ரல் மாதம் விஜய்யின் பீஸ்ட் மற்றும் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் மற்றும் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி, ஜூன் மாதம் விக்ரம் என இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 8 படங்களை ரெட் ஜெயண்ட்ஸ் வெளியிட்டது.
இரண்டாம் பாதியில் மாதத்திற்கு குறைந்தது ரெண்டு படம் வீதம் ரெட் ஜெயண்ட்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதம் மாதவனின் ராக்கெட்ரி மற்றும் சந்தானத்தின் குளுகுளு, ஆகஸ்ட் மாதம் மட்டும் அமீர்கானின் லால் சிங் சத்தா, தனுஷின் திருச்சிற்றம்பலம், அருள்நிதியின் டைரி, விக்ரமின் கோப்ரா என நான்கு படங்களை ரெட் ஜெயண்ட் வெளியிட்டுள்ளது. அதேபோல் இந்த மாதம் இதுவரை ஆர்யாவின் கேப்டன் மற்றும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு படங்களை உதயநிதி வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இனி வரும் மாதங்களில் வெளியாக உள்ள படங்களின் ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றி வைத்துள்ளது ரெட் ஜெயண்ட்ஸ். அதன்படி கார்த்தியின் சர்தார், வெற்றிமாறனின் விடுதலை, சுந்தர் சி-யின் காஃபி வித் காதல், கமலின் இந்தியன் 2 என வரிசையாக ரெட் ஜெயண்ட் காட்டில் பட மழை தான் என சொல்லும் அளவுக்கு வாங்கி குவித்து வருகிறார் உதயநிதி.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2-வை தட்டித்தூக்கிய உதயநிதி... கமலின் கெத்தான போஸ்டருடன் ஷூட்டிங் அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்
ஆரம்பத்தில் உதயநிதி படங்களை மிரட்டி வாங்குகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவையெல்லாம் உண்மையில்லை என உதயநிதியே பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் பெரிய நடிகர்கள் தங்களது படங்களை ரெட் ஜெயண்ட்ஸில் கொடுப்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் எந்த ஒரு டிஸ்டிரிபியூட்டரும் தராத அதிகம் அளவிலான ஷேர், ரெட் ஜெயண்ட்ஸ் மட்டும் தான் கொடுக்கிறது.
சமீபத்தில் நடிகரும் அரசியல் வாதியுமான சீமானே உதயநிதி வரிசையாக படங்கள் வெளியிடுவதை பாராட்டி இருந்தார். அதேபோல் ரெட் ஜெயண்ட்ஸ் இதுவரை வெளியிட்ட படங்களிலேயே அதிக வசூல் ஈட்டி சாதனை படைத்த விக்ரம் படத்தின் 100-வது நாள் விழா சமீபத்தில் கோவையில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், ரெட் ஜெயண்ட்ஸ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அவர்களால் தான் தற்போது படங்கள் எந்தவித சச்சரவுகள் இன்றி ரிலீஸ் ஆவதாகவும், திரையரங்க உரிமையாளர்கள் சந்தோஷமாக இருப்பதாகவும் பாராட்டினார்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் பெரிய நடிகர்களின் படங்களும் தற்போது உதயநிதியின் உதவியால் மீண்டும் உயிர்பெற தொடங்கி உள்ளன. அதன்படி இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த கமலின் இந்தியன் 2 மற்றும் விக்ரமின் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை ரெட் ஜெயண்ட் தான் தற்போது கையில் எடுத்துள்ளது. இவ்வாறு பெரிய படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ரெட் ஜெயண்ட்ஸ் சிறு பட்ஜெட் படங்கள் மீதும் ஆர்வம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதையும் உதயநிதி கருத்தில் கொண்டு செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சூரியின் விடுதலையில் இணைந்த உதயநிதி...புதிய அப்டேட் இதோ!