முடிவுக்கு வரும் 2022... டிசம்பரில் மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா..? வியக்க வைக்கும் கோலிவுட் லைன்-அப்
2022-ம் ஆண்டு இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இம்மாதம் தமிழ்சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வருடத்தின் கடைசி மாதமும் அதிக அளவிலான படங்கள் ரிலீசாவது வழக்கம். அந்த வகையில் இந்த 2022-ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த ஆண்டு இந்த மாதம் ஏராளமான தமிழ் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இதற்கு காரணம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே விஜய் அஜித் என இருபெரும் நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
அதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி, விஜய் சேதுபதி போலீஸாக நடித்திருக்கும் டிஎஸ்பி மற்றும் நயன்தாராவின் கோல்டு ஆகிய திரைப்படம் ரிலீசாகி உள்ளன. இதுதவிர எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வதந்தி என்கிற வெப் தொடரும் இன்று நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது.
அதேபோல் டிசம்பர் 2-வது வாரம் அதாவது டிசம்பர் 9-ந் தேதி வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரிலீசாக உள்ளது. வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் நாயகனாக நடித்துள்ள படம் இது என்பதால் இப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதுதவிர ஜீவா நடித்துள்ள வரலாறு முக்கியம் மற்றும் நட்டி நட்ராஜின் குருமூர்த்தி ஆகிய படங்களும் அன்றைய தினம் திரைகாண உள்ளன.
இதையும் படியுங்கள்... கீர்த்தி சுரேஷ் போட்டோ காட்டி பேஸ்புக்கில் காதல் வலை வீசிய பெண்... வசமாக சிக்கிய இளைஞரிடம் ரூ.40 லட்சம் அபேஸ்
இதற்கு அடுத்த படியாக டிசம்பர் 16-ந் தேதி தமிழ்படங்கள் பெரியளவில் ரிலீசாகவில்லை. இதற்கு காரணம் அவதார் 2 திரைப்படம் தான். இப்படம் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்காரணமாக அந்த வாரம் தமிழ் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ரஜினி நடித்துள்ள பாபா திரைப்படம் அந்த சமயத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதையடுத்து டிசம்பர் 23, அது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் பெரிய நடிகர்களின் படங்கள் அன்று களமிறங்குகின்றன. குறிப்பாக விஷாலின் லத்தி திரைப்படம், ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள அகிலன் மற்றும் நயன்தாராவின் கனெக்ட் ஆகிய படங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வர உள்ளன.
அதேபோல் இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 30-ந் தேதி பிரபுசாலமன் இயக்கி உள்ள செம்பி திரைப்படம் ரிலீசாக உள்ளது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா, மிஷ்கினின் பிசாசு 2 போன்ற படங்களும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் மற்றும் விஜய் ஆண்டனியின் தமிழரசன் ஆகிய படங்களும் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்... 450 ஆண்டு பழமைவாய்ந்த அரண்மனையில் ஆரம்பமானது ஹன்சிகாவின் கல்யாண கொண்டாட்டம்