சந்தானத்திடம் சரண்டர் ஆன சூரி; வசூலில் மாமனை விட மாஸ் காட்டும் டிடி நெக்ஸ்ட் லெவல்!
சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும், சூரியின் மாமன் திரைப்படமும் மே 16ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

DD Next Level vs Maaman Box Office
காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது நாகேஷ், வடிவேலு தொடங்கி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நாகேஷ், வடிவேலு ஆகியோர் ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோல்களில் நடிப்பதை கைவிடவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பேமஸ் ஆன சந்தானம், சூரி ஆகியோர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பின்னர் காமெடி ரோல்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போது அவர்கள் ஹீரோவாக நடித்த மாமன் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி உள்ளன.
சூரி vs சந்தானம்
சந்தானம் ஹீரோவாக பெரியளவில் சோபிக்கவில்லை என்றே சொல்லலாம். ஆனால் அவரைக் காட்டிலும் சூரி, ஹீரோவாக நடித்த அனைத்து படங்களுமே ஏகோபித்த வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இவர்கள் இருவரும் நாயகனாக நடித்த படங்கள் முதன்முறையாக ஒரே நாளில் ரிலீஸ் ஆகி உள்ளன. அதன்படி மே 16ந் தேதி சூரியின் மாமன் திரைப்படமும், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகி உள்ளன.
மாமன் vs டிடி நெக்ஸ்ட் லெவல்
இதில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். அப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சுவாசிகா, பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இதில் செல்வராகவன், கெளதம் மேனன், யாஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாமன் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் வசூல்
இந்நிலையில், இரண்டு படங்களின் வசூல் நிலவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி சூரி நடித்த மாமன் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளை விட 30 சதவீதம் கூடுதலாக வசூலித்து உள்ளது. முதல் நாளில் ரூ.1.53 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் ரூ.2.04 கோடி வசூலித்துள்ளது. இருப்பினும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை நெருங்க முடியவில்லை. டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் முதல் நாளில் ரூ.2.54 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.2.59 கோடியும் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை வகிக்கிறது.