பாசப் போராட்டத்தில் ஜெயித்தாரா சூரி? மாமன் பட விமர்சனம் இதோ
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமன் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Maaman Movie Review
விலங்கு வெப் தொடரை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஹேசம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
மாமன் கதைக்களம்
பாபா பாஸ்கர் - சுவாசிகா தம்பதி 10 ஆண்டுகளாக குழந்தையே இல்லாமல் கவலைப்படுகிறார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையை தாய்மாமனான சூரி தான் பாசமாக வளர்க்கிறார். பெற்றோரை காட்டிலும் சூரி உடன் தான் அதிகம் அன்பு காட்டத் தொடங்குகிறான் அந்த சிறுவன். இந்த சூழலில் சூரிக்கும், ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
திருமணத்துக்கு பின்னரும் தாய்மாமனை விட்டு பிரிய மறுக்கும் அந்த சிறுவனின் சுட்டித்தனத்தால் கணவனை நெருங்க முடியாமல் தவிக்கிறார் நாயகி ஜஸ்வர்யா லட்சுமி. இதனால் சூரிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே சண்டை வருகிறது. அக்கா மகனை பிரிய முடியாமல் தவிக்கிறார் சூரி. ஒரு கட்டத்தில் குடும்பத்திற்குள் சண்டை ஏற்பட்டு பிரிய வேண்டிய கட்டாயம் வருகிறது. மனைவிக்காக சூரி தனது மருமகனை விட்டுக் கொடுத்தாரா? உறவுகளை பிரிய விடாமல் தடுத்தாரா? என்பதே மீதிக் கதை.
மாமன் பட விமர்சனம்
இதுவரை காமெடியில் கலக்கிய சூரி, இந்த படத்தில் காதல், ரொமான்ஸ் காட்சிகளிலும் கலக்கி உள்ளார். படம் முழுக்க பாசத்தைக் கொட்டி தன்னுடைய யதார்த்த நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார் சூரி. அவருக்கு ஏற்ற ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கலக்கி உள்ளார். அவரின் வெகுளித்தனமான பேச்சும், இயல்பான நடிப்பும் வாவ் சொல்ல வைக்கிறது.
லப்பர் பந்து நடிகை சுவாசிகா நடிப்பில் முதிர்ச்சி காட்டி கவனம் ஈர்க்கிறார். தம்பியா? மகனா? என்கிற சூழல் வரும் போது அவரின் நடிப்பு நம்மை கலங்க வைக்கிறது. மகன் பாசத்துக்கு ஏங்கும் ஒரு தந்தையாக பாபா பாஸ்கர் நம் மனதில் நிற்கிறார்.
மாமன் படம் எப்படி இருக்கு?
சிறுவனாக நடித்துள்ள பிரகீத் சிவன் தன்னுடைய சுட்டுத்தனத்தாலும், அன்பாலும் நம்மை கட்டிப்போடுகிறார். ராஜ்கிரண். பால சரவணன், ஜெயபிரகாஷ். விஜி சந்திரசேகர், சாயாதேவி. கீதா கைலாசம் என அனைவரும் தங்கள் ரோலை திறம்பட செய்துள்ளார்கள்.
கட்டில் உடைந்துபோகும் காட்சி, காது குத்து காட்சி, முதலிரவில் சிறுவனின் அட்ராசிட்டி என படத்தில் கலகலப்புக்கு கியாரண்டியான காட்சிகள் நிறைய உள்ளன, விமலின் கேமியோவும் அருமை. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். அதேநேரத்தில் ஹேசம் அப்துல் வகாப்பின் பின்னணி இசை சோபிக்கவில்லை. 'லாஜிக்' மீறல்கள் சில இடங்களில் இருந்தாலும், உணர்வு பூர்வமான திரைக்கதையால் நம்மை கவர்ந்துவிடுகிறார் மாமன். பேமிலியோடு ரசிக்கும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.