முன்பதிவிலேயே செஞ்சுரி அடித்ததா கூலி? அதிர வைக்கும் ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

Coolie Ticket Pre Sales Collection
கோலிவுட்டில் ஜீரோ பிளாப் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது 6வதாக கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்காக முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்துள்ளார் லோகி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தான் தயாரித்து இருக்கிறார். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.
கூலி நட்சத்திர பட்டாளம்
கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். குறிப்பாக தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, மலையாளத்தில் இருந்து செளபின் சாஹிர், கன்னடத்தில் இருந்து உபேந்திரா, இந்தி திரையுலகில் இருந்து அமீர்கான் போன்ற ஜாம்பவான்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இதுதவிர நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் கூலி படத்தில் நடிகர் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறார். இதுதவிர இப்படத்தில் ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரனும், நடன இயக்குனராக சாண்டி மாஸ்டரும் பணியாற்றி இருக்கிறார்கள். எடிட்டிங் பணிகளை ஃபிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார்.
கூலி படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு
கூலி லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் என்பதாலும், அவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்துள்ளதாலும் அப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே அப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூலி படத்திற்கு செம டிமாண்ட் இருந்து வருகிறது. இதனால் முன்பதிவு மூலமே கோடி கோடியாய் வசூலை வாரிக் குவித்து கல்லாகட்டி வருகிறது கூலி. இப்படத்திற்கு முன்பதிவு மூலம் எவ்வளவு வசூலாகி உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
கூலி முன்பதிவு வசூல்
அதன்படி கூலி திரைப்படத்தின் முதல் நாள் முன்பதிவு வசூல் மட்டும் ரூ.80 கோடியை தாண்டி உள்ளது. இன்னும் ஒரு நாள் எஞ்சி உள்ளதால், இது 100 கோடியை எட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதில் இந்தியாவில் 36 கோடியும், வெளிநாடுகளில் 44 கோடியும் வசூலாகி உள்ளது. அதேபோல் முதல் வார இறுதிவரை (ஆகஸ்ட் 14 முதல் 17 வரை) முன்பதிவு வசூல் ரூ.105 கோடி வசூலாகி உள்ளதாம். அதில் இந்தியாவில் மட்டும் 49 கோடியும், வெளிநாடுகளில் 56 கோடியும் வசூலாகி இருக்கிறதாம். இதற்கு முன்னர் முதல் வார இறுதிவரை முன்பதிவில் அதிக வசூல் அள்ளிய படமாக விஜய்யின் லியோ இருந்து வருகிறது. அப்படம் ரூ.138 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.