ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது மாரடைப்பு... பிக்பாஸ் பிரபலம் சிகிச்சை பலனின்றி பலி - சோகத்தில் திரையுலகினர்
பிக்பாஸ் பிரபலமும், பாலிவுட் காமெடி நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவாவின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தவர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த 2005-ம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான ‘தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்’ என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். அந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.
இதையடுத்து பிக்பிரதர், பாம்பே டூ கோவா, ஃபிராங்கி என சில இந்தி படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த ராஜு ஸ்ரீவஸ்தவா, கடந்த 2009-ம் ஆண்டு இந்தியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார். 60 நாட்கள் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிலைத்து இருந்த அவர், அதன்பின் வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் நிலைகுலைந்து விழுந்தார். பின்னர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு மருத்துவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 58. அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ராஜு ஸ்ரீவஸ்தவாவின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விவேக் மட்டுமில்லைங்க... ரகுவரன் முதல் ரோஜா வரை கமலுடன் ஒருமுறை கூட நடிக்காத நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ