சினிமாவின் லவ் குரு; மணிரத்னம் படங்களும்... மாஸ்டர் பீஸ் காதல் காட்சிகளும் ஒரு பார்வை
இயக்குனர் மணிரத்னம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் இயக்கிய அற்புதமான காதல் காட்சிகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Maniratnam Birthday
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணிரத்னம் பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம். MBA பட்டதாரியாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த மணிரத்னத்தின் முதல் படம் பல்லவி - அனுபல்லவி. அனில்கபூர் தான் இந்த படத்தின் நாயகன். கன்னடத்தில் வெளியான பல்லவி - அனு பல்லவி படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. கன்னடத்தில் முதல் படம் தோல்வியை தழுவ, இரண்டாவது படத்தை மலையாளத்தில் இயக்கினார் மணிரத்னம். உனரு எனும் அந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த மோகன்லால் நடித்திருந்தார். படம் வித்தியாசமாக இருக்கிறதே என பாராட்டுக்கள் கிடைத்தாலும், வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.
மணிரத்னம் சந்தித்த தொடர் தோல்வி
கன்னடம், மலையாளத்தை தொடர்ந்து தமிழுக்கு வந்தார் மணிரத்னம். முரளியை நாயகனாக வைத்து பகல் நிலவு எனும் படத்தை இயக்கினார். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ஆனால் அந்த கதையையும் களத்தையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அந்த படமும் வெற்றியடையவில்லை. பகல் நிலவை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய இதயக்கோயில் படமும் தோல்வி அடைந்தது. முதல் நான்கு படங்களும் தோல்வி அடைந்ததால் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தார் மணிரத்னம்.
மெளன ராகத்தால் மீட்டெழுந்த மணிரத்னம்
இதையடுத்து அவர் இயக்கிய படம் மெளன ராகம். இந்தப் படம் தான் மணிரத்னத்தின் மகத்துவத்தை மக்கள் மத்தியில் உரக்கச் சொன்னது. திவ்யா எனும் கதாபாத்திரத்தை வைத்து மணிரத்னம் எழுதிய சிறுகதை தான் பின்னர், மெளன ராகம் எனும் முழுநீள படமாக உருவானது. அந்த காலத்தில் எந்த வகையான டெம்பிளேட்டுக்குள்ளும் சிக்காமல், எளிமையாகவும் அதே சமயம் எல்லோரையும் ஈர்க்கும் விதமாக மென் காதல் கதையோடு வெளியான மெளன ராகம் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல். பெரும்பாலானவர்களுக்குள் தீரா வடுவாய் நிழலாடும் முதல் காதலின் வழியை சொன்ன விதத்தில் மெளன ராகம் தனி கவனம் பெற்றது.
கேங்ஸ்டர் படத்திலும் காதலை தூக்கி நிறுத்திய மணிரத்னம்
மெளன ராகம் மணிரத்னத்தின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்கொண்டு வந்தது. ஆனால் அதை அடுத்து அவர் இயக்கிய நாயகன் படம் மும்பையை கதைக்களமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக எடுக்கப்பட்டாலும், முதல் பாதியில் வரும் சரண்யா உடனான காதல் காட்சிகளை எல்லாம் எளிதில் விவரித்துவிட முடியாது. சிவப்பு விளக்கு பகுதியில் சரண்யாவை சந்திக்கும் கமல்ஹாசன், அவர்களது உரையாடல், அந்த காட்சியின் பின்னணி இசை என ஒவ்வொன்றும் வேறலெவல்.
காதலின் கவிபாடிய கமர்ஷியல் படம் தளபதி
பின்னர் மகாபாரதத்தின் துரியோதனன் - கர்ணன் நட்பை அடிப்படையாக வைத்து சம்கால சம்பவங்களுடன் சுவாரஸ்மாக எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் தளபதி. சூப்பர்ஸ்டார் எனும் பட்டத்தை ரஜினிகாந்துக்கு நிரந்தரமாக்கியதில் இந்த படத்துக்கு பெரும் பங்கு உண்டு. சூர்யா - தேவா என ஆக்ஷன் களத்தில் பயணிக்கும் தளபதி படத்தில் ஒரு மென்னிலவு துண்டினை போல ஷோபனாவின் கதாபாத்திரத்தை உலவவிட்டிருந்தார் மணிரத்னம்.
ரோஜா மூலம் டிராக்கை மாற்றிய மணிரத்னம்
துரியோதனன் - கர்ணனை சம்கால காட்சிகளாக்கி வெற்றிகண்ட மணிரத்னம், அடுத்ததாய் சத்யவான் - சாவித்ரி கதாபாத்திரங்களை கையில் எடுத்து ரோஜாவாக்கினார். தன் கணவனை பயங்கரவாதிகள் பிணைக்கைதியாக வைத்துக் கொள்ள, அவரை மீட்கும், போராட்டத்தில் வெற்றி காண்பார் நாயகி. பயங்கரவாத பின்னணியில் மென் காதலையும் சொன்ன விதத்தில் ரோஜா பெரும் வெற்றி கண்டது. தளபதி வரை இளையராஜாவோடு பயணித்த மணிரத்னம், ரோஜாவில் ஏ.ஆர்.ரகுமானோடு புதிய பயணத்தை தொடங்கினார்.
மணிரத்னம் படத்தில் முக்கோண காதல்
ராம்கோபால் எழுதிய கதையில் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் ஒரு முக்கோண காதல் சொல்லப்பட்டிருக்கும். காதலியை விட பணமே பிரதானம் என இருக்கும் நாயகன்களால் படத்திற்கு பின்னடைவு ஏற்பட்டாலும், பாடல்கள் கனமான காதலை பார்ப்பவர்களுக்குள் கடத்தியது. தான் எடுத்துக் கொண்ட களங்களில் காதலை காட்சிப்படுத்தும் மணிரத்னம், காதலையே களமாக்கி வெற்றிகண்ட படம் பம்பாய். மதம் எனும் கட்டமைப்பு மனித உறவுகளுள் ஏற்படுத்தும் விரிசல்களை அழுத்தமாய் பேசியது இந்தப்படம்.
அடுத்த தலைமுறை காதலை சொன்ன மணிரத்னம்
கருணாநிதி - எம்.ஜி.ஆர் எனும் அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இருவர் படத்திலும் காதல் காட்சிகளுக்கென தனித்தன்மை இருக்கும். பிரகாஷ் ராஜ், தபு, கெளதமி; மோகன்லால் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரது காதல் காட்சிகளில் யதார்த்தம் தாண்டி மணிரத்னத்தின் ரசனை இருக்கும். கார்த்திக் ஆக மாதவனும், ஷக்தியாக ஷாலினியும் நடித்து அடுத்த தலைமுறை காதலை திரையில் காட்டிய படம் தான் அலைபாயுதே.
மணிரத்னத்தை தோல்வியில் இருந்து மீட்ட காதல் படம்
பின்னர் கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து போன்ற படங்களில் ஈழப் பிரச்சனை, மாணவர்கள் புரட்சி ஆகியவற்றை பேசிய மணிரத்னம், அடுத்ததாக இயக்கிய கடல், ராவணன், காற்று வெளியிடை ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிக்கனியை கொடுக்கவில்லை. இதையடுத்து தன்னுடைய கம்பர்ட் ஜோனான காதல் டிராக்கிற்கு மீண்டும் வந்த படம் தான் ஓகே கண்மணி. இப்படம் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் உள்ள காதல் ஜோடிகளைப் பற்றி பேசியது.
சரித்திர காதல் கதையிலும் மிளிர்ந்த மணிரத்னம்
இதையடுத்து செக்கச் சிவந்த வானம், படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்தாலும் அதிலும் காதலுக்கு பஞ்சமிருக்காது. சமகால காதல்களை பேசிய மணிரத்னம், சற்று புராண கால காதல் கதையுடன் உருவாக்கிய படம் தான் பொன்னியின் செல்வன். இதில் குந்தவை - வந்தியத்தேவன் இடையேயான காதல் காட்சிகள் மனதை வருடிச் சென்றன. தற்போது தக் லைஃபிலும் ஆக்ஷன் அதிகம் இருந்தாலும் அதில் காதல் காட்சிகள் ஆங்காங்கே இருக்கும் என்பதை முன்னோட்ட காட்சிகளிலேயே பார்க்க முடிந்தது. இப்படி காதலும்,.. மணிரத்னமும் பிரிக்க முடியாத ஒரு கூட்டணியாக இருந்துள்ளது.