தமிழ் பாடல்களில் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும் தற்போது தமிழ் பாடல்கள் அர்த்தமற்றதாக தோன்றுவதாகவும் பிரபல இயக்குனர் அனுராக் காஷியப் அளித்த பேட்டிக்கு இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
நிலைபெற்று விளங்கிய தமிழ் பாடல்கள்
தமிழ் திரையுலகை பொருத்தவரை கதைகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவிற்கு பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. பாடல்களுக்காகவே பல படங்கள் ஓடின. 50 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பாடல்கள் கூட இன்றும் பலரது பிளே லிஸ்டில் இருக்கின்றன. மூன்று மணி நேர படத்தில் சொல்லாத விஷயங்களை மூன்று நிமிட பாடல்களுக்குள் சொல்லும் திறமையை தமிழ் பாடலாசிரியர்கள் கைவசம் வைத்திருந்தனர். அதனால் தான் பல தசாப்தங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பாடல்கள் கூட இன்றும் நிலைபெற்று விளங்கி வருகின்றன.
ஆங்கில கலப்பை விமர்சித்த ஹிந்தி இயக்குனர்
ஆனால் தற்போது பாடல்களும், அதில் உள்ள வரிகளும் பலருக்கும் புரிவதில்லை. சமூக வலைதளங்களில் சில நாட்கள் டிரெண்டாவதோடு சரி. மற்றபடி பாடல்கள் நிலைத்து நிற்பதில்லை. மேலும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்புகளும் பாடல்களின் அழகையே கெடுத்து விடுகின்றன. இதுகுறித்து பேசி இருந்த பிரபல இயக்குனர் அனுராக் காஷியப், தற்போது தமிழ் பாடல்களில் தமிழை கேட்க முடிவதில்லை. முந்தைய காலத்தில் தமிழில் இருந்து பாடல்களை ஹிந்திக்கு கேட்டு வாங்கும் சூழல் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. தமிழ்ப் பாடல்கள் தற்போது ஆங்கில கலப்புடன் அர்த்தமற்று விளங்குவதாக விமர்சித்திருந்தார்
தமிழ் பாடல்களில் ஆங்கில கலப்பு குறித்து மணிரத்னம் விளக்கம்
இதற்கு பதில் அளித்துள்ள மணிரத்னம், “என்னுடைய பெரும்பாலான படத்தின் தலைப்புகள் தமிழில் தான் வைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். ரகுமானும் நானும் தமிழ் இலக்கியத்திலிருந்து நிறைய கவிதைகளை எடுத்து பாடல்கள் ஆக்கியுள்ளோம். இளம் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக ஆங்கில பாடல் வரிகள் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் மறுக்கிறேன். அது மட்டுமே ஒரு படத்தை ஓட வைக்காது. அது மட்டுமே ஒரு நல்ல படத்தை உருவாக்கி விடாது. நல்ல கதாபாத்திரங்களை அமைத்தால் மட்டுமே அது ஒரு கதைக்கு உதவும். பாடல்களோ தலைப்போ ஒரு படத்தை ஓட வைக்க உதவாது” எனக் கூறினார்.
