இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் என்னென்ன? அதன் வசூல் விவரங்கள் தெரியுமா?
இயக்குனர் அட்லீ இயக்கிய திரைப்படங்கள் குறித்தும், அதன் வசூல் விவரங்கள் குறித்தும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பான் இந்தியா இயக்குனரான அட்லீ
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல், இந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் ‘நண்பன்’, ‘எந்திரன்’ ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர், ‘ராஜா ராணி’ என்கிற திரைப்படத்தை இயக்கிதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். பின்னர் இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார்.
ராஜா ராணி (2013)
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கும் அட்லீ, ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. தனது 25-வது வயதில் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இதுவே அவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இந்தப் படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரூ.50 கோடி வசூலை குவித்திருந்தது. மேலும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விஜய் அவார்ட்ஸையும் அட்லீ பெற்றார்.
தெறி (2016)
‘ராஜா ராணி’ படத்தைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் இவர் இயக்கிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் ‘தெறி’. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி வசூலை குவித்திருந்தது. 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலை குவித்த இரண்டாவது படம் என்கிற பெருமையை இந்த படம் பெற்றது. மேலும் இந்த படத்தில் நடிகர்களின் தேர்வு, இசை, திரைக்கதை என அனைத்தும் பாராட்டப்பட்டது.
மெர்சல் (2017)
தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு விஜயை வைத்து இரண்டாவது முறையாக ‘மெர்சல்’ படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். மேலும் சமந்தா ரூத் பிரபு, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே சூர்யா, வடிவேலு, சத்யராஜ் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் உலக அளவில் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் விஜயின் தொழில் வாழ்க்கையில் அதிக வசூல் தந்த படம் ஆகவும் மாறியது.
பிகில் (2019)
தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு விஜயை வைத்து மூன்றாவது முறையாக ‘பிகில்’ படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், ரூ.305 கோடி வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற பெருமையை ‘பிகில்’ பெற்றது.
ஜவான் (2023)
இந்தப் படங்களுக்கு பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்ற அட்லீ, ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், பிரியாமணி, தீபிகா படுகோன் ஆகியோர் நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் உலக அளவில் ரூ.1117.39 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரும் சாதனை படைத்தது. ஒரு ஹிந்தி திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் இவ்வளவு வசூலிப்பது இது முதன்முறை என்று கூறப்பட்டது.
AA22xA6 (2025)
தற்போது அல்லு அர்ஜுனை வைத்து AA22xA6 என்கிற படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது. இந்த படத்தை இயக்குவதற்கு அட்லீ ரூ.100 கோடியும், அல்லு அர்ஜுன் ரூ.200 கோடியும் சம்பளமாக பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வெறும் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி இருந்த போதிலும் இந்திய அளவில் பேசப்படும் ஒரு இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார்.