ஆளவிடுங்கடா சாமி... காட்டி பட தோல்விக்கு பின் நடிகை அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு..!
Actress Anushka Shetty : நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான காட்டி திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.

Anushka Shetty Takes Important Decision
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி, சமீபத்தில் அவர் நடித்த 'காட்டி' திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிருஷ் இயக்கத்தில், விக்ரம் பிரபுவுடன் அனுஷ்கா இணைந்து நடித்திருந்த இந்த அதிரடி ஆக்ஷன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருப்பினும், அனுஷ்காவின் நடிப்பு விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்து உள்ளது. ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து காட்டி படம் தூக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அனுஷ்காவின் அதிரடி முடிவு
அதன்படி அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.. சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக குறிப்பிட்டு, அதை கையெழுத்துப் பிரதியாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
அனுஷ்கா தனது பதிவில், "நீல ஒளியிலிருந்து மெழுகுவர்த்தி ஒளிக்கு மாறுகிறேன். உண்மையில் நாம் தொடங்கிய இடத்துடன், உலகத்துடன் மீண்டும் இணைவதற்காக சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கதைகளுடன், மேலும் அன்புடன் விரைவில் மீண்டும் சந்திப்பேன் என்றும், எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுஷ்காவின் ஆசை
'காட்டி' படத்தின் புரமோஷன் நிகழ்வின் போது, நடிகை அனுஷ்கா பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், இன்னும் என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அதிர்ச்சியூட்டும் பதிலை அளித்தார். "முழுமையான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வலுவான கதை அமைந்தால் நிச்சயம் வில்லியாக நடிப்பேன்" என்று தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறினார் அனுஷ்கா.
கம்பேக் கொடுப்பாரா அனுஷ்கா?
தற்போது புதிய கதைகளைக் கேட்டு வருவதாகவும், நல்ல படங்கள் கைவசம் இருப்பதாகவும் அனுஷ்கா தெரிவித்தார். தனது முதல் மலையாளப் படத்துடன், விரைவில் ஒரு சுவாரஸ்யமான தெலுங்குப் படத்தையும் அறிவிப்பேன் என கூறி உள்ளார் அனுஷ்கா. 'வேதம்' படத்திற்குப் பிறகு கிருஷ் உடன் இணைந்து அனுஷ்கா பணியாற்றிய படம் என்பதால் 'காட்டி' மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்யவில்லை. அனுஷ்காவின் கம்பேக்கிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.