லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ-வில் லேடி டான் ஆக எண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷெட்டி, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Anushka Shetty Enters LCU
ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த யூனிவர்ஸ் படங்கள் தற்போது தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அவர் கைதி படம் மூலம் ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கினார். அந்த யூனிவர்ஸில் அடுத்ததாக வெளிவந்த படம் தான் விக்ரம். அவரின் இந்த முயற்சிக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து லியோவையும் அந்த யூனிவர்ஸுக்குள் கொண்டு வந்தார் லோகி. இப்படி அவரின் எல்.சி.யூ நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.
அடுத்தடுத்து உருவாகும் எல்.சி.யூ படங்கள்
லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவில் அடுத்த படமாக பென்ஸ் உருவாகி வருகிறது. இதுவரை எல்.சி.யூ படங்களை லோகேஷ் மட்டுமே இயக்கி வந்த நிலையில், பென்ஸ் படத்தை அவருக்கு பதில் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், நிவின் பாலி வில்லனாகவும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கைதி 2-வில் அனுஷ்கா?
பென்ஸ் படத்தை தொடர்ந்து உருவாக உள்ள எல்.சி.யூ திரைப்படம் தான் கைதி 2. இப்படத்தின் கதையுடன் ரெடியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு உள்ளார். கைதி 2 திரைப்படத்தில் கார்த்தி உடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகின்றது.
அனுஷ்காவுக்கு என்ன ரோல்?
அதன்படி கைதி 2 திரைப்படத்தில் லேடி டான் ஆக அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்கிற வில்லன் கதாபாத்திரம் கம்மியான நேரம் மட்டுமே வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் அனுஷ்காவின் லேடி டான் கதாபாத்திரமும் கைதி 2-வில் செம பவர்ஃபுல்லானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை அனுஷ்கா ஏற்கனவே கார்த்தி உடன் அலெக்ஸ்பாண்டியன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.