சம்பளமே வாங்காமல் அனிருத் இப்படி ஒரு வேலையை செய்கிறாரா..! ஆச்சர்யம் ஆனால் உண்மை
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தின் பிறந்தநாளான இன்று, அவர் சம்பளமே வாங்காமல் வேலை செய்து வருவது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இசையமைப்பாளர் அனிருத், விஜய், அஜித், ரஜினி, கமல், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும், இவர் தனக்கு சுயாதீன இசைமீது இருக்கும் ஆர்வத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி அனிருத் இசையமைப்பாளர் ஆன பின்னர், முதன்முதலாக இசையமைத்த சுயாதீன பாடல் என்றால் அது சச்சின் பாடல் தான். கொலவெறி பாடல் பாணியில் தனுஷ் உடன் சேர்ந்து அவர் உருவாக்கி இருந்த இப்பாடலில் தனுஷ் மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்திருந்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று ஒரு சுயாதீன இசை பாடலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிருத். அந்த வகையில், எனக்கென யாரும் இல்லையே தொடங்கி சமீபத்தில் கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வு படலான ஊசிங்கோ வரை அந்த பயணத்தையும் தொடர்ந்து வருகிறார் அனிருத்.
அனிருத்தின் இசையில் உருவாகும் பாடல்களுக்கு மட்டுமின்றி அவரின் குரலில் வெளியான பாடல்களுக்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு உண்டு. அனிருத்தின் குரல் வளத்தை கண்டு வியந்த இதர இசையமைப்பாளர்களும், அவரை தங்களது இசையில் பாடல்களைப் பாடவைத்து அழகு பார்த்தனர். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான், யுவன், தமன், சந்தோஷ் நாராயணன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் படத்திலும், தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் அனிருத் பாடி உள்ளார்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்... ரஜினிக்கு ரூ.300 கோடியை அள்ளிக்கொடுத்த லைகா..! - எதற்காக தெரியுமா?
மெர்சலாயிட்டேன், யாஞ்சி, ஹே மாமா, ஷூட் த குருவி, காந்தக்கண்ணழகி, ஒத்தையடி பாதையில என அனிருத் பாடினாலே அந்த பாடல் சூப்பர் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு, பிற இசையமைப்பாளர்கள் இசையில் அனிருத் பாடிய பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டன. இதுவரை அனிருத் தன் சொந்த குரலில் 150 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
ஆனால் இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் பிற இசையமைப்பாளர்களுக்காக இதுவரை பாடிய பாடல்களுக்கு சம்பளமே வாங்கியதே இல்லை என்பது தான். இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் தான் இவ்வாறு செய்வதாகவும் அனிருத்தே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அனிருத்திற்கு இருக்கும் புகழுக்கு அவர் நினைத்தால் ஒரு பாடல் பாட பல லட்சம் சம்பளமாக கேட்கலாம். அப்படி இருக்கையில் அவர் சம்பளமே வாங்காமல் இத்தகைய பணியை தொடர்ந்து வருவது என்பது மிகப்பெரிய விஷயம். நிஜமாவே ரொம்ப தங்கமான மனசுதான்பா இந்த அனிருத்துக்கு.
இதையும் படியுங்கள்... கோலிவுட் டூ பாலிவுட்.. தீபாவளிக்கு திரையரங்குகளில் பட்டாசாய் பட்டைய கிளப்ப காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ