கோலிவுட் டூ பாலிவுட்.. தீபாவளிக்கு திரையரங்குகளில் பட்டாசாய் பட்டைய கிளப்ப காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ
தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் படங்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாக உள்ள படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக தீபாவளி என்றாலே புத்தாடை உடுத்துவது, பட்டாசு வெடிப்பது போன்றவை எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல் அன்று ரிலீசாகும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் எப்போது அதிக மவுசு இருக்கும். வழக்கமாக தீபாவளி என்றாலே அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களில் யாராவது ஒருவரின் படம் ரிலீசாகி விடும். ஆனால் கோலிவுட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு தீபாவளி சற்று வித்தியாசமானதவே உள்ளது. ஏனெனில் மேற்கண்ட முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்று கூட இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகவில்லை என்பது சற்று ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், அதற்கு இணையான எதிர்பார்ப்புடன் சில படங்கள் களமிறங்க காத்திருக்கின்றன. அதனைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். இவர் நடிப்பில் இதற்கு முன் வெளியான டாக்டர், டான் ஆகிய இரு படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதனால் இப்படத்தின் மூலம் அவர் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதுமட்டுமின்றி தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் படம் ரிலீஸ் ஆவது இதுவே முதன்முறை. இப்படம் வருகிற அக்டோபர் 21-ந் தேதி திரை காண உள்ளது. அனுதீப் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்து விட்டதால் படமும் அதேபோல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
சர்தார்
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சர்தார். நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு இதுவரை சக்சஸ்புல்லாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு மாதங்களில் அவர் நடிப்பில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் என இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே பிரம்மாண்ட வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனால் சர்தார் படம் அவருக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்து மேலும் ஸ்பெஷலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 21 அன்று ரிலீசாக உள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் வெளியான டிரைலருக்கே ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். அந்த அளவு வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் பாலம்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ராம் சேது. இப்படத்தை தமிழில் ராமர் பாலம் என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். கடலுக்கு நடுவே ராமர் கட்டியதாக சொல்லப்படும் பாலம் குறித்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய கதையாக இருந்தாலும் அது பல ஆண்டுகளாக நீடிக்கும் மர்மத்துக்கு விடைகொடுக்குமா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தை அபிஷேக் சர்மா இயக்கி உள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அக்ஷய் குமாருக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேங் காட்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள படம் தேங் காட். காமெடி கலந்த பேண்டஸி படமாக தயாராகி உள்ள இப்படத்தை இந்திர குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜய் தேவ்கன் உடன் சித்தார்த் மல்கோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 25-ந் தேதி திரைகாண உள்ளது. இந்தியில் அக்ஷய் குமாரின் ராம் சேது படத்துக்கு போட்டியாக தேங் காட் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... உலகின் மிக அழகான 10 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை தீபிகா படுகோன்! இவரின் ப்ளஸ் எது தெரியுமா?
மான்ஸ்டர்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மான்ஸ்டர் என்றாலே எஸ்.ஜே.சூர்யாவின் படம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் தற்போது அதே பெயரில் மலையாள படம் ஒன்று உருவாகி உள்ளது. மான்ஸ்டர் படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை வைஷாக் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் மோகன்லால் உடன் லட்சுமி மஞ்சு, பிஜ்ஜூ ஆகியோரும் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 21-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
படவெட்டு
மலையாள திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நிவின் பாலி. அவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் படவெட்டு. இப்படத்திற்காக உடல் எடையை எல்லாம் அதிகரித்து கடின உழைப்பை போட்டு நடித்துள்ளார் நிவின் பாலி. அருவி பட நாயகி அதிதி பாலன் தான் இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மஞ்சு வாரியரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 21-ந் தேதி வெளியாக உள்ளது.
ஒரி தேவுடா
தெலுங்கில் தீபாவளி விடுமுறையில் ரிலீசாக உள்ள படம் தான் ஒரி தேவுடா. இது தமிழில் கடந்த 2020-ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தான் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஒரு தேவுடாவை இயக்கி உள்ளார். புதுமுகங்களான மிதிலா பால்கர், விஸ்வாக் சென் ஆகியோர் நடித்துள்ள இப்படம் தமிழைப் போல் வெற்றிவாகை சூடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படியுங்கள்... யாரும் எதிர்பார்க்காத செம்ம ட்விஸ்ட்.? ரகசிய திருமணம் உண்மையை கூறி ஷாக் கொடுத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!