அல்லு அர்ஜுனை கசக்கி பிழியப்போகும் அட்லீ; ஆத்தாடி இத்தனை ரோலில் நடிக்கிறாரா?
புஷ்பா 2 வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லீ குமாரின் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Allu Arjun - Atlee Film
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்தின் வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். இயக்குனர் அட்லீ குமார் இயக்கும் புதிய பான் இந்தியா படத்தில் நாயகனாக நடிக்கிறார் அட்லீ. அப்படத்திற்கு தற்போது AA22 எனப் பெயரிடப்பட்டுள்ளது. காலப் பயணத்தை மையமாகக் கொண்ட அறிவியல் புனைவுத் திரைப்படமாக தயாராகும் இப்படத்தில் ஹாலிவுட் தரத்தில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
AA22ல் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் என்ன?
2024ல் வெளியான புஷ்பா 2 படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான அல்லு அர்ஜுன், தற்போது ஜவான் பட இயக்குனர் அட்லீ குமாருடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகன், வில்லன் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரம் என மூன்று விதமான வேடங்களில் அவர் தோன்றுவாராம். அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். படத்தைச் சிறப்பாக உருவாக்க, அட்லீ சர்வதேச விஎஃப்எக்ஸ் நிபுணர்களுடன் பணியாற்றுகிறார். அல்லு அர்ஜுன் கடுமையாக உழைத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ற உடல்வாகு, ஸ்டைலிங் மற்றும் தோற்றம் என வித்தியாசம் காட்ட உள்ளார்
700 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்
இந்திய சினிமாவில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் படங்களில் ஒன்றாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜான்வி கபூர் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 அல்லது 2027ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் சம்பளம்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக நடிக்கும் அல்லு அர்ஜுன், ரூ.300 கோடி சம்பளமாக வாங்க உள்ளாராம். இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார் அல்லு அர்ஜுன். மேலும் இப்படத்தின் இயக்குனர் அட்லீ, இப்படத்தை இயக்க ரூ.100 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த இயக்குனரும் 100 கோடி சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.