ஏகே 64 படத்துக்காக அஜித்துக்கு அள்ளிக் கொடுக்கப்படும் சம்பளம் இத்தனை கோடியா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ள ஏகே 64 படத்துக்கான சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

AK 64 Ajithkumar Salary
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் 2025-ம் ஆண்டு 2 படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் முதல் படமாக விடாமுயற்சி கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கி இருந்தார். இது பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.137 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்தது.
பாக்ஸ் ஆபிஸில் கம்பேக் கொடுத்த அஜித்
விடாமுயற்சி தோல்விக்கு பின்னர் அஜித் நடித்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த திரிஷா தான் குட் பேட் அக்லி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது. இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.245 கோடி வசூலித்து அஜித்தின் தரமாக கம்பேக் படமாக அமைந்தது. அஜித்தின் கெரியரில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் படமும் இதுதான்.
மீண்டும் ஆதிக் உடன் கூட்டணி அமைக்கும் அஜித்
நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் பிசியாக உள்ளதால் வருகிற நவம்பர் மாதம் தான் அவரின் அடுத்தபடமான ஏகே 64 படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளாராம். அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தை ரசிகர்களைக் கவரும் வண்ணம் எடுத்த ஆதிக், இப்படத்தில் அஜித்தை மேலும் மெருகேற்றி காட்ட திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளத்தை உயர்த்திய அஜித்
இந்நிலையில் ஏகே 64 படத்துக்காக நடிகர் அஜித் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவருக்கு ரூ.180 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதாம். இதற்கு முன்னர் குட் பேட் அக்லி படத்துக்காக அவருக்கு ரூ.163 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருந்தது. அதைவிட ஏகே 64 படத்துக்கு ரூ.17 கோடி கூடுதலாக அஜித் வாங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. மேலும் இப்படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதாம். இப்படத்தை ரூ.260 முதல் 275 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.